கணவன்-மனைவி இடையே தகராறு:கணவர் துப்பாக்கியால் சுட்டதில் மகள் பரிதாபமாக பலியானார்

police pregnant gun dad mom
By Praveen Apr 14, 2021 08:00 PM GMT
Report

கிருஷ்ணகிரி மாவட்டம் அஞ்செட்டியில் கணவன் மனைவி பிரச்சினையில் கோபமுற்ற கணவர் மனைவியை நோக்கி துப்பாக்கியால் சுட்டதில் குறுக்கே புகுந்து தடுக்க வந்த கர்ப்பிணி மகள் குண்டு பாய்ந்து பலியானார்.

கிருஷ்ணகிரி மாவட்டம் அஞ்செட்டி, தளி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் வசிப்பவர் அருணாச்சலம் (60). நரிக்குறவர் சமூகத்தைச் சேர்ந்தவர். இவரது மகள் வெங்கடலட்சுமி(21). இவருக்கும் கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த சீனா(25) என்பவருக்கும் கடந்த 6 மாதத்துக்கு முன் திருமணம் நடந்தது. வெங்கடலட்சுமி 3 மாத கர்ப்பிணியாக உள்ளார்.

நேற்று யுகாதி பண்டிகை என்பதால் தனது தாய் வீட்டுக்கு கணவருடன் வெங்கட லட்சுமி வந்துள்ளார். இன்று மாலை வெங்கடலட்சுமியின் தந்தை அருணாச்சலம் மது அருந்திவிட்டு வீட்டுக்கு வந்துள்ளார். வீட்டில் அருணாச்சலத்துக்கும் அவரது மனைவிக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. வெங்கடலட்சுமி தாய் தந்தை இருவரையும் சமாதானப்படுத்தியுள்ளார்.

ஆனால் சண்டை நிற்கவில்லை, வாக்குவாதம் முற்றியதில் கடும் கோபமடைந்த அருணாச்சலம் மனைவியை கொன்று விடுவதாக கூறி வீட்டிலிருந்த துப்பாக்கியை எடுத்து தனது மனைவியை நோக்கி சுட்டுள்ளார்.

அப்போது வெங்கடலட்சுமி தாயாரை காக்க குறுக்கே வர குண்டு அவரது வலது மார்பில் பாய்ந்துள்ளது. இதில் ரத்த வெள்ளத்தில் கீழே விழுந்துள்ளார் வெங்கடலட்சுமி. அய்யோ ஆத்திரத்தில் மகளை சுட்டுக்கொன்று விட்டேனே என்று மகளை தூக்கிக்கொண்டு அஞ்செட்டி அரசு மருத்துவமனைக்கு சென்றுள்ளார் அருணாச்சலம். 

ஆனால் அங்கு வெங்கடலட்சுமியை பரிசோதித்த மருத்துவர், வெங்கடலட்சுமி ஏற்கெனவே இறந்துவிட்டார் என்று கூறியுள்ளார். பெற்றோர் சண்டையில் தாயைக்காக்க உயிரிழந்த வெங்கடலட்சுமியின் உடல் பிரேத பரிசோதனைக்காக தேன்கனிக்கோட்டை அரசு பொதுமருத்துவமனைக்கு அனுப்பப்பட்டது.

மகளை கொலை செய்த தந்தை அருணாச்சலத்தை தளி போலீஸார் கைது செய்தனர். பெற்றோர் சண்டையில் தாயைக் காப்பாற்றச் சென்ற கர்ப்பிணி மகள் துப்பாக்கி குண்டு பாய்ந்து உயிரிழந்தது தளியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கணவன்-மனைவி இடையே தகராறு:கணவர் துப்பாக்கியால் சுட்டதில் மகள் பரிதாபமாக பலியானார் | Pregnant Dad Gunshot Dead Mom Kill