பிரசவித்த பெண்ணை கீழே தள்ளிய ஊழியரின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
நாகை அரசு மருத்துவமனையில், பிரசவித்த பெண்ணை, பெண் ஊழியர் ஒருவர் வீல் சேரில் வேகமாக தள்ளி வந்து கீழே சாய்த்ததாக, உறவினர்கள் குற்றஞ்சாட்டினர்.
நாகை மாவட்டம், திட்டச்சேரி தேவங்குடி கிராமத்தைச் சேர்ந்தவர் முருகவள்ளி(20). இவர் பிரசவத்திற்காக, நாகை அரசு மருத்துவமனையில், 18ல் சேர்க்கப்பட்டார். அறுவை சிகிச்சை மூலம், ஆண் குழந்தை பிறந்தது.
முன்னதாக கொரோனா வார்டில், சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், 21ம் தேதி முருகவள்ளிக்கு தொற்று இல்லை என, பரிசோதனை முடிவு வந்தது. இதையடுத்து, மருத்துவமனை ஒப்பந்த பெண் ஊழியர் ஒருவர், முருகவள்ளியை வீல் சேரில், சாதாரண வார்டிற்கு அழைத்துச் சென்றார்.
அப்போது, முருகவள்ளி கீழே சாய்ந்தார். உறவினர்கள் கூறுகையில், ஆண் குழந்தை பிறந்துள்ளதால், பணம் தருமாறு பெண் ஊழியர் கேட்டார்.
இதனால், வாக்குவாதம் ஏற்பட்டது. பிறகு 'கோபமடைந்த பெண் ஊழியர், வீல் சேரை வேகமாக தள்ளிச் சென்றதில், முருகவள்ளி கீழே சாய்ந்தார்' என்றனர்.சம்பவத்தை சிலர், மொபைல் போனில் வீடியோவாக பதிவு செய்து, சமூக வலைதளங்களில் பரப்பினர். பிரசவித்த பெண்ணை அலட்சியமாக அழைத்து வந்த சம்பவம், நோயாளிகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.