வங்கிக்குள் துப்பாக்கியுடன் நுழைந்து மிரட்டிய சாமியார் - தட்டி துாக்கிய போலீஸ்
திருவாரூர் மாவட்டம் மஞ்சக்குடியில் உள்ள சிட்டி யூனியன் வங்கிக்குள் துப்பாக்கியுடன் உள்ளே நுழைந்து மிரட்டிய சாமியாரை போலீசார் கைது செய்துள்ளனர்.
பிணை பத்திரம் கேட்ட வங்கி அதிகாரி
திருவாரூர் மாவட்டம் குடவாசல் அருகே மூலங்குடி பகுதியில் உள்ள திருமலை சாமி என்பவர் இடி மின்னல் சங்கம் என்கின்ற அமைப்பை நடத்தி வருகிறார்.
சீனாவில் படித்து வரும் தனது மூத்த மகள் காவியாவிற்கு கல்வி கடன் வேண்டி சிட்டி யூனியன் வங்கிக்கு சென்றுள்ளார்.
அப்போது வங்கி மேலாளர் கடன் வழங்க வேண்டும் என்றால் கல்விக்கடன் பிணையாக சொத்து பத்திரங்களை கேட்டுள்ளார்.
அப்போது அந்த சாமியார் படிப்பு முடிந்த பிறகு அந்த பணம் உங்களுக்கு தானே வரப்போகிறது அதற்கு எதற்கு நான் பிணையாக சொத்து பத்திரம் கொடுக்க வேண்டும் என விவாதம் செய்துள்ளார்.
இதையடுத்து வங்கி மேலாளர் பிணையாக சொத்து பத்திரம் இல்லாமல் கல்வி கடன் தரமுடியாது என கூறியதால் வீடு திரும்பியுள்ளார் அந்த சாமியார். வீடு வந்த அவர் துப்பாக்கியை எடுத்துக் கொண்டு வங்கிக்கு சென்றுள்ளார்.
துப்பாக்கியுடன் சென்று மிரட்டல்
அங்கு துப்பாக்கியுடன் நுழைந்த அவர் படையப்பா பட பாணியில் நாற்காலியை எடுத்து போட்டு சிகரெட் பிடித்துக் கொண்டு அதிகாரிகளை மிரட்ட தொடங்கினார். இதை தனது பேஸ்புக் பக்கத்தில் லைவ் போட்டுள்ளார்.
இதையடுத்து போலீசாருக்கு தகவல் கொடுத்துள்ளனர் வங்கி மேலாளர் அங்கு வந்த போது அவர் சென்று விட்டதை அறிந்த போலீசார் வீட்டுக்கு சென்று அவரை கைது செய்தனர்.
பட்ட பகலில் சாமியார் துப்பாக்கியை கொண்டு வங்கி அதிகாரியை மிரட்டிய சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.