இந்திய அணியில் யாரும் செய்யாத சாதனை - வரலாற்றில் இடம் பிடித்த பிரஷித் கிருஷ்ணா
ஒருநாள் கிரிக்கெட்டில் இளம் வீரர் பிரஷித் கிருஷ்ணா இந்திய அணியில் யாரும் செய்யாத சாதனை ஒன்றைப் படைத்துள்ளார்.
இந்தியா வந்துள்ள வெஸ்ட் இண்டீஸ் அணி 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்றுள்ளது. இதில் பிப்ரவரி 6 ஆம் தேதி அகமதாபாத்தில் நடைபெற்ற முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்திலும், நேற்று நடந்த 2வது போட்டியில் 44 ரன்கள் வித்தியாசத்திலும் வெற்றி பெற்று தொடரைக் கைப்பற்றியது.
இப்போட்டியில் இந்திய அணி வீரர் பிரஷித் கிருஷ்ணா 9 ஓவர்கள் வீசி 3 மெய்டன்களோடு 12 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 4 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார். இதன் காரணமாக அவருக்கு ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது.
இதன் மூலம் இந்திய அணிக்காக அறிமுகமாகி முதல் 6 போட்டிகளில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய இந்திய வீரர் என்ற சாதனையை பிரஷித் கிருஷ்ணா படைத்துள்ளார். கடந்த 2021ஆம் ஆண்டு இங்கிலாந்து அணிக்கு எதிராக அறிமுகமாகிய அவர் இதுவரை 6 ஒருநாள் போட்டிகளில் மட்டுமே விளையாடி 15 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.