அரசியல் கட்சி தொடங்கும் கிங் மேக்கர் பிரசாந்த் கிஷோர் - பீகாரில் ஆட்சியை பிடிப்பாரா?

Prashant Kishor Bihar Election
By Karthikraja Jul 29, 2024 09:30 AM GMT
Report

பிரபல தேர்தல் வியூக வகுப்பாளரான பிரசாந்த் கிஷோர் தனது அரசியல் கட்சியை அதிகாரப்பூர்வமாக தொடங்க உள்ளார்.

பிரசாந்த் கிஷோர்

பீகார் மாநிலத்தை சேர்ந்த பிரசாந்த் கிஷோர் இந்திய அரசியல் களத்தில் பிரபல தேர்தல் வியூக வகுப்பாளராக அறியப்படுகிறார். இதற்காக I-PAC எனப்படும் தேர்தல் வியூக நிறுவனத்தைபி தொடங்கி நடத்தி வருகிறார். இந்த நிறுவனம் பல்வேறு நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற தேர்தலில் பல்வேறு கட்சிகளுக்காக பணியாற்றி உள்ளது.

prashant kishor with modi mkstalin nitish kumar

2014 நாடாளுமன்ற தேர்தலில் நரேந்திர மோடிக்காகவும், சட்டமன்ற தேர்தல்களில் 2015 ல் நிதிஷ் குமார், 2021 ல் முதல்வர் ஸ்டாலின், 2021 ல் மம்தா பானர்ஜி, 2019 ல் ஜெகன் மோகன் ரெட்டி, 2020 ல் அரவிந்த் கெஜ்ரிவால் ஆகியோரை ஆட்சியில் அமர்த்த இந்த நிறுவனம் பணியாற்றியுள்ளது. 2026 சட்டமன்ற தேர்தலுக்காக அதிமுக தரப்பில் பிரசாந்த் கிஷோரிடம் பேச்சுவார்த்தை நடப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஜன் சுராஜ்

ஏற்கனவே கடந்த 2022 ம் ஆண்டு முதல் ஜன் சுராஜ் என்ற பெயரில் பீகாரில் பரப்புரையை தொடங்கிய பிரசாந்த் கிஷோர், அதே பெயரில் அரசியல் கட்சியை தொடங்க உள்ளார். ஜன் சுராஜ், வரும் அக்டோபர் 2 ம் தேதி காந்தி ஜெயந்தி அன்று அரசியல் கட்சியாகப் பதிவு செய்யப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

prashant kishor jan suraj

இந்நிலையில் நேற்று பீகார் மாநிலம் பாட்னாவில் நடைபெற்ற கூட்டத்தில் பிரசாந்த் கிஷோர் பேசுகையில், புதிய கட்சி வருகின்ற அக்டோபர் மாதம் 2 ஆம் தேதி தொடங்கப்படும். கட்சி தொடங்கப்படும் முதல் நாளிலேயே 1 கோடி உறுப்பினர்களைக் கொண்ட முதல் கட்சியாக ஜன் சூராஜ் கட்சி வரலாற்றில் இடம் பிடிக்கும்.

ஜன் சுராஜ் அரசியல் கட்சியில் எந்தவொரு சாதி, சமூகத்துக்குள்ளும் அடங்கிவிடாது. பொதுப்பிரிவு, ஓபிசி, எஸ்.சி, முஸ்லிம் என ஐந்து குழுக்களாகப் பிரிக்கப்படும். ஒவ்வொரு முறையும் இந்த ஐந்து வகுப்புகளில் ஒருவருக்கு கட்சியை வழிநடத்த வாய்ப்பு வழங்குவது என்று முடிவு செய்யப்பட்டுள்ளது.

பீகார் தேர்தல்

ஒவ்வொரு ஆண்டிற்கும் அல்லது 2 ஆண்டிற்கும் ஒரு தலைவர் என அனைத்து தரப்புக்கும் கட்சியை வழிநடத்த வாய்ப்பு வழங்கப்படும். தலித்துகள் மிகவும் பின்தங்கிய நிலையில் இருப்பதால், புதிய கட்சியின் முதல் தலைவர் இந்தப் பிரிவில் இருந்து வருவார். சுழற்சி முறை பிரதிநிதித்துவம் வழங்க முடிவு செய்துள்ளோம் எனத் தெரிவித்துள்ளார்.

பீகார் மாநிலத்தில் அடுத்த ஆண்டு சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ள சூழலில், பீகாரில் உள்ள 243 சட்டமன்ற தொகுதிகளிலும் போட்டியிடும் திட்டம் உள்ளதாக பிரசாந்த் கிஷோர் அறிவித்துள்ளார்.

பீகார் அரசியலில் நிதிஷ் குமாரின் ஐக்கிய ஜனதா தளம், தேஜஸ்வி யாதவின் ராஷ்ட்ரிய ஜனதா தளம் மற்றும் பாஜக ஆதிக்கம் செலுத்தி வரும் நிலையில், பல்வேறு தேர்தல்களில் பல்வேறு அரசியல் கட்சிகளுக்கு வியூகங்களை வகுத்து கொடுத்த அனுபவம் வரும் பீகார் சட்டமன்ற தேர்தலில் பிரசாந்த் கிஷோருக்கு காய் கொடுக்குமா என பொறுத்திருந்து காண வேண்டும்.