அரசியல் ஆலோசகர் பதவியிலிருந்து பிரஷாந்த் கிஷோர் திடீர் ராஜினாமா
பஞ்சாப் முதலமைச்சர் அமரீந்தர் சிங்கின் முதன்மை அரசியல் ஆலோசகர் பதவியை தேர்தல் வியூக வல்லுநர் பிரஷாந்த் கிஷோர் திடீரென ராஜினாமா செய்துள்ளார்.
சமீபத்தில் நடந்து முடிந்த தமிழகம், மேற்குவங்க சட்டப்பேரவைத் தேர்தல்களில் திமுக, திரிணாமுல் காங்கிரஸ் கட்சிகளுக்கு ஆலோசகராக இருந்து அந்த கட்சிகளின் வெற்றிக்கு காரணமாக திகழ்ந்தவர் பிரசாந்த் கிஷோர். இவர் கடந்த 2017 ஆம் ஆண்டு நடந்த பஞ்சாப் சட்டமன்ற தேர்தலில் முதல்வர் அமரீந்தர் சிங்கிற்கு தேர்தல் வியூகம் வகுக்கும் பணியை பிரஷாந்த் கிஷோர் மேற்கொண்டிருந்தார்.
இதில் காங்கிரஸ் வெற்றிபெற்று ஆட்சியமைத்தது.
இதனிடையே பஞ்சாப் மாநில சட்டமன்றத்திற்கு அடுத்த ஆண்டு தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், பிரஷாந்த் கிஷோர் தனது பதவியை ராஜினாமா செய்திருப்பது அரசியல் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. இது முதல்வர் அமரீந்தர் சிங்கிற்கு மிகப்பெரிய பின்னடைவாகவும் கருதப்படுகிறது.
தனிப்பட்ட காரணங்களுக்காக தனது பதவியை ராஜினாமா செய்ததாக பிரஷாந்த் கிஷோர் தெரிவித்திருந்தாலும், 2024 ஆம் ஆண்டு நடக்கவுள்ள நாடாளுமன்ற தேர்தலை கருத்தில் கொண்டு பாஜகவுக்கு எதிராக அனைத்து கட்சிகளையும் ஒன்று திரட்டும் பணியில் அவர் முயற்சியில் ஈடுபடவுள்ளார் என்று தகவல் வெளியாகியுள்ளது.