தடுப்பூசி போட்டுக் கொள்வதை தேசப்பணி போல் கருத வேண்டும் - மாநகராட்சி ஆணையாளர் பிரகாஷ் பேட்டி
சென்னை அயனாவரத்தில் பெருநகர சென்னை மாநகராட்சி சார்பில் நடத்தப்படும் விழிப்புணர்வு முகாமில் சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் ஆய்வு மேற்கொண்டார். அயனாவரம் மார்க்கெட்டில் உள்ள கடைகளில் சென்னை மாநகராட்சி ஆணையாளர் பிரகாஷ் அவர்கள் நேரடியாக சென்று கடை உரிமையாளர்கள் மற்றும் பொதுமக்களிடம் கொரோனா பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.
முக கவசம் இல்லாத பெண் ஒருவரிடம் முக கவசத்தை அணிவித்து பற்றியும் மற்றும் அவருக்கு முகக்கவசம் வழங்கியும் விழிப்புணர்வை ஏற்படுத்தினார்.மேலும் கடையின் உரிமையாளர்களிடம் கொரோனா பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தி அவர்களுக்கு அறிவுரை வழங்கினார். அதனைத் தொடர்ந்து செய்தியாளர் சந்திப்பு நடைபெற்றது.
அப்போது அவர் பேசியதாவது, “கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்வதை நாம் தேசப்பணி போல் மேற்கொள்ள வேண்டும் என்றும் தெரிவித்தார். இரண்டு மூன்று மாதங்களுக்கு முக கவசம் கண்டிப்பாக அனைவரும் அணிய வேண்டும் என்றும், சென்னையில் ஒரு நாளில் 50 ஆயிரம் முதல் 60 ஆயிரம் வரை கொரோனா தடுப்பூசி போடுவதற்கான திறன் சென்னை மாநகராட்சிக்கு உள்ளது.
இதுவரை சென்னையில் 4 லட்சத்துக்கும் மேற்பட்டவர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது. சின்னம்மை தடுப்பூசி இல்லை என்றால் உலகத்தையே அது அழித்து இருக்கும். அந்த தடுப்பூசி இருப்பதால்தான் உலகம் காப்பாற்றப்பட்டது அதுபோல்தான் இந்த கொரோனா தடுப்பு ஊசியும்” என்று தெரிவித்தார்.