தேசிய கொடி அவமதிக்கப்பட்டதை சகித்துக்கொள்ள முடியாது - பிரகாஷ் ஜவ்டேகர் காட்டம்

city farmer republic famous
By Jon Jan 29, 2021 01:19 PM GMT
Report

டெல்லி செங்கோட்டையில் தேசிய கொடியை அவமதித்தவர்கள் மீது கடும் நடவடிக்கை பாயும் என்று மத்திய அரசு கூறியுள்ளது. டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்த மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் இதனை தெரிவித்தார். மத்திய அரசு கொண்டு வந்துள்ள மூன்று வேளாண் சீர்திருத்த சட்டங்களை திரும்பப்பெற வலியுறுத்தி ஆயிரக்கணக்கான விவசாயிகள் டெல்லியில் 2 மாதங்களுக்கு மேலாக போராடி வருகின்றனர்.

இதற்கிடையில், குடியரசு தினத்தன்று நடைபெற்ற ட்ராக்டர் பேரணியின்போது விவசாயிகள் செங்கோட்டைக்குள் புகுந்து அங்கு கொடி ஒன்றை ஏற்றினர். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெருத்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன. இது குறித்து, மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர், டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசுகையில், டெல்லி செங்கோட்டையில் மூவர்ணக் கொடி இழிவு படுத்தப்பட்டதை இந்தியா சகித்துக் கொள்ளாது என்று கூறினார்.

பஞ்சாபில் இருந்து டிராக்டர்களை ஓட்டி வந்த பலர் குற்றங்களில் ஈடுபடும் குண்டர்கள் என்றும் அவர்களை அம்மாநில காங்கிரஸ் அரசு முன்கூட்டியே கைது செய்யாதது ஏன் என்றும் ஜவ்டேகர் கேள்வி எழுப்பியுள்ளார். விவசாயிகள் போராட்டத்தை காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி ஆதரித்தது மட்டுமல்லாது தூண்டிவிட்டார்எனவே அவர் நாட்டு மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும்.

நாட்டின் தேசியக்கொடி அவமானப்படுத்தப்படுவதை ஒருநாளும் சகித்துக் கொள்ள முடியாது. செங்கோட்டையில் தேசிய கொடியை அவமானப்படுத்தியவர்கள் மீது கடும் நடவடிக்கை பாயும். இந்த சம்பவத்தில் தொடர்புடைய பஞ்சாப் நடிகர் தீப் சிங் சித்து பாஜக கட்சியைச் சேர்ந்தவர் என்று காங்கிரஸ் கட்சி கூறுவது அபத்தம் என்றும் அமைச்சர் ஜவடேகர் கூறியுள்ளார்.