தர்மேந்திர பிரதான் ராஜினாமா: கல்வி அமைச்சகத்தின் கூடுதல் பொறுப்பு பிரகலாத் ஜோஷிக்கு

Delhi India
By Vinoja Jul 26, 2026 05:41 AM GMT
Report

நீட் போராட்டம் எதிரொலி: தர்மேந்திர பிரதான் ராஜினாமா; 3 கோரிக்கைகளும் நிறைவேறியதால் போராட்டம் வாபஸ் நீட் இளநிலைத் தேர்வு வினாத்தாள் கசிவைக் கண்டித்து இளைஞர்கள் முன்னெடுத்த தொடர் போராட்டத்தின் எதிரொலியாக, மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் தனது பதவியை ராஜினாமா செய்தார்.

இதையடுத்து, தங்களின் மூன்று முக்கிய கோரிக்கைகளையும் அரசு ஏற்றுக்கொண்டதால், கரப்பான் பூச்சி ஜனதா கட்சி தனது போராட்டத்தை வாபஸ் பெறுவதாக அறிவித்தது.

தர்மேந்திர பிரதான் ராஜினாமா: கல்வி அமைச்சகத்தின் கூடுதல் பொறுப்பு பிரகலாத் ஜோஷிக்கு | Prahlad Joshi Appointed Education Minister

நீட் தேர்வு முறைகேட்டுக்கு தார்மீகப் பொறுப்பேற்று தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் என்ற கோரிக்கையுடன், கடந்த மாதம் 6ஆம் தேதி முதல் கரப்பான் பூச்சி ஜனதா கட்சியினர் டெல்லி ஜந்தர் மந்தரில் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

நாடு முழுவதும் இளைஞர்கள் மற்றும் பல்வேறு அமைப்புகளின் ஆதரவு அதிகரித்த நிலையில், நாட்டின் நலனையும் மாணவர்களின் எதிர்காலத்தையும் கருத்தில் கொண்டு தனது பதவியை ராஜினாமா செய்வதாக தர்மேந்திர பிரதான் அறிவித்தார்.

இதையடுத்து, போராட்டத்தின் முதல் கோரிக்கை நிறைவேறியதால் டெல்லி ஜந்தர் மந்தரில் இளைஞர்கள் வெற்றியைக் கொண்டாடினர். அப்போது பேசிய கரப்பான் பூச்சி ஜனதா கட்சி நிறுவனர் அபிஜித் தீப்கே, "இளைஞர்களுடன் மோதாதீர்கள்; இதுதான் ஜனநாயகம்" என்று தெரிவித்தார்.

இதற்கிடையில், எஞ்சிய இரண்டு கோரிக்கைகள் தொடர்பாக மத்திய அமைச்சர்கள் ஜெ.பி. நட்டா மற்றும் ஜிதேந்திர சிங்குடன் கரப்பான் பூச்சி ஜனதா கட்சி பிரதிநிதிகள் மூன்றாவது கட்ட பேச்சுவார்த்தை நடத்தினர்.

பேச்சுவார்த்தைக்குப் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த ஜெ.பி. நட்டா, போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது பதிவு செய்யப்பட்ட வழக்குகள் திரும்பப் பெறப்படும் என்றும், நீட் தேர்வு தொடர்பாக உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு அதிகபட்ச இழப்பீடு வழங்குவது குறித்து அரசு பரிசீலிக்கும் என்றும் உறுதியளித்தார்.

அரசு மூன்று கோரிக்கைகளுக்கும் இணக்கம் தெரிவித்ததைத் தொடர்ந்து, தங்களது போராட்டத்தை முடித்துக்கொள்வதாக கரப்பான் பூச்சி ஜனதா கட்சி அறிவித்தது.

தர்மேந்திர பிரதான் ராஜினாமா: கல்வி அமைச்சகத்தின் கூடுதல் பொறுப்பு பிரகலாத் ஜோஷிக்கு | Prahlad Joshi Appointed Education Minister

அமைச்சர் பிரகலாத் ஜோஷிக்கு கல்வித்துறை 

இதனிடையே, தர்மேந்திர பிரதானின் ராஜினாமாவை குடியரசுத் தலைவர் ஏற்றுக்கொண்ட நிலையில், மத்திய உணவு வழங்கல் மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தித் துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷிக்கு கல்வித்துறை கூடுதல் பொறுப்பாக வழங்கப்பட்டுள்ளது.

கர்நாடகாவின் தார்வாட் மக்களவைத் தொகுதியிலிருந்து தொடர்ந்து ஐந்து முறை தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள பிரகலாத் ஜோஷி, முன்னதாக நாடாளுமன்ற விவகாரங்கள், நிலக்கரி மற்றும் சுரங்கத்துறை அமைச்சராகப் பணியாற்றிய அனுபவம் கொண்டவர்.

தர்மேந்திர பிரதான் ராஜினாமா: கல்வி அமைச்சகத்தின் கூடுதல் பொறுப்பு பிரகலாத் ஜோஷிக்கு | Prahlad Joshi Appointed Education Minister

நிர்வாகத் திறன், பிரச்சினைகளை அமைதியாகக் கையாளும் திறன் மற்றும் எதிர்க்கட்சிகளுடன் ஒருங்கிணைந்து செயல்படும் அனுபவம் ஆகியவற்றின் அடிப்படையில் அவருக்கு கல்வித்துறை பொறுப்பு வழங்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.

தற்போது, நீட் தேர்வு சர்ச்சையால் மாணவர்கள் மத்தியில் ஏற்பட்டுள்ள நம்பிக்கையின்மையைப் போக்கி, தேசிய அளவிலான தேர்வுகளில் வெளிப்படைத்தன்மை மற்றும் நம்பகத்தன்மையை உறுதி செய்வதே பிரகலாத் ஜோஷி எதிர்கொள்ளும் முக்கிய சவாலாக இருக்கும்.