பிரீபெய்ட் சர்வீசிலிருந்து போஸ்ட்பெய்ட் சர்வீசுக்கு மாறுன மாதிரி இருக்கு... ரிஷப் பந்த் ஷாட் குறித்து கலாய்த்த முன்னாள் வீரர்
ரிஷப் பந்தின் பேட்டிங் குறித்து இந்திய அணியின் முன்னாள் வீரர் கிண்டலாக கருத்து தெரிவித்திருக்கிறார்.
தென்னாப்பிரிக்காவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டிருக்கும் இந்திய அணி 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகின்றது. செஞ்சூரியன் மைதானத்தில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில்113 ரன்கள் வித்தியாசத்தில் தென்னாப்பிரிக்காவை இந்திய அணி வீழ்த்தி வெற்றி பெற்றது. இதனையடுத்து, ஜோகன்னஸ்பர்க் மைதானத்தில் நடைபெற்ற 2-வது டெஸ்ட் போட்டியில் 7 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியாவை வீழ்த்தி தென்னாப்பிரிக்க அணி வெற்றி பெற்றுள்ளது.
இந்த இரு அணிகளும் தலா 1 வெற்றியுடன் 1-1 என்ற கணக்கில் சமமாக இருக்கிறது. இதனால் இன்று நடைபெறும் கடைசி டெஸ்ட் போட்டியில் வெற்றி பெறும் அணியே தொடரை கைப்பற்றும் என்பதால் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டிருக்கிறது.
2-வது டெஸ்ட் போட்டியின் 2-வது இன்னிங்சில் இந்திய அணி 163 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்தது. அப்போது, விக்கெட் கீப்பர் ரிஷப் பந்த் களமிறங்கினார்.
இந்த இக்கட்டான நிலையில் அணி இருந்தபோது கை கொடுப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், 3 பந்துகள் மட்டுமே எதிர்கொண்டு அவர் ரன் ஏதும் எடுக்காமல் விக்கெட் கீப்பரிடம் கேட்ச் கொடுத்து அவுட்டானார்.
இது ரசிகர்களிடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியது. இந்நிலையில், ரிஷப் பந்தின் ஷாட் குறித்து இந்திய அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் பிரக்யான் ஓஜா விமர்சனம் செய்திருக்கிறார்.
அதில், ‘ரிஷப் பந்த் அடித்த ஷாட்டை பார்க்கும்போது பிரீபெய்ட் சர்வீசிலிருந்து போஸ்ட்பெய்ட் சர்வீசுக்கு மாறி வருவது போல் இருந்தது’ என்று கிண்டலாக குறிப்பிட்டிருக்கிறார்.