திமுக பிரமுகர் தூண்டுதலில் ஆணவப் படுகொலையா? இளைஞர் பிரபாகரன் மரணத்தில் என்ன நடந்தது?

By Fathima Oct 12, 2021 08:30 PM GMT
Report
Courtesy: BBC Tamil

கும்பகோணத்தில் காதல் விவகாரத்தில் தலித் இளைஞர் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தால், அப்பகுதியில் காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர். `என் தம்பியின் காதலால் பிரச்னை வரும் என எதிர்பார்த்தோம். ஆனால், கொலை வரையில் செல்லும் என நாங்கள் எதிர்பார்க்கவில்லை' என கலங்குகிறார், கொலையான பிரபாகரனின் சகோதரி பிரியங்கா. என்ன நடந்தது?

கும்பகோணத்தை அடுத்துள்ள பந்தநல்லூரில் உள்ள வேட்டமங்கலம் என்ற கிராமத்தைச் சேர்ந்தவர் பிரபாகரன். 24 வயதான இவர் ஆட்டோ ஓட்டுநராக வேலை பார்த்து வந்தார். இவரது தாயார், உடல்நலக் குறைவால் நான்கு ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார்.

இவரது தந்தை இளங்கோவும் கடந்த நான்கு மாதங்களுக்கு முன்பு இறந்துவிட்டார். இதையடுத்து, மூத்த சகோதரி பிரியங்கா, தம்பி விக்னேஷ், தங்கை பிரபாவதி எனக் குடும்பத்தை கவனிக்க வேண்டிய இடத்தில் பிரபாகரன் இருந்துள்ளார். மேலும், குடும்பத்தில் நிலவிய வறுமை காரணமாக ஜவுளிக்கடை ஒன்றில் பிரியங்கா வேலை பார்த்து வந்துள்ளார்.

இந்த நிலையில், பந்தநல்லூர் காமாட்சிபுரம், மேல்மரத்துறையை சேர்ந்த `வெல்டர்' மணிகண்டன் என்பவரின் மகளை, பிரபாகரன் காதலித்து வந்ததாகக் கூறப்படுகிறது.

இந்தப் பெண், பந்தநல்லூரில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் 11ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார். பிரபாகரன் தலித் சமுதாயத்தைச் சேர்ந்தவராக இருந்ததால், தொடக்கத்தில் இருந்தே இந்தக் காதலுக்கு மாணவியின் தந்தை எதிர்ப்பு தெரிவித்து வந்துள்ளார். இதன் தொடர்ச்சியாக, கடந்த 9ஆம் தேதி இரவு 7 மணியளவில் பிரபாகரனை, கத்தியால் குத்தி மணிகண்டன் கொன்று விட்டதாக பந்தநல்லூர் காவல்நிலையத்தில் பிரியங்கா புகார் கொடுத்துள்ளார்.

தலித் சமூகத்தைச் சேர்ந்தவரை பிற்படுத்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த ஒருவர் கொன்று விட்டதால், `இது சாதி ஆணவப் படுகொலை' எனக் கூறி தலித் அமைப்புகள் போராட்டத்தில் இறங்கின. ''இந்தப் படுகொலையின் பின்னணியில் திருப்பனந்தாள் ஒன்றியத்தில் கவுன்சிலராக இருக்கும் தி.மு.க பிரமுகர் சீத்தாபதி என்பவர் இருக்கிறார். அவர் சொல்லித்தான் இந்தக் கொலை நடந்துள்ளது. அவரைக் கைது செய்யும் வரையில் சடலத்தை வாங்க மாட்டோம்'' எனக் கூறி வி.சி.க, சி.பி.ஐ, தீண்டாமை ஒழிப்பு முன்னணி ஆகியவை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றன.

தற்போது வரையில் சீத்தாபதி கைது செய்யப்படாததால், சடலத்தை வாங்குவதற்கு பிரபாகரனின் உறவினர்களும் சில அமைப்புகளும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. இந்தச் சம்பவத்தில் தொடர்புடையதாகக் கூறப்படும் கார்த்தி, `வெல்டர்' மணிகண்டன் ஆகியோரை போலீஸார் கைது செய்துள்ளனர்.

பிரபாகரன் மரணத்தில் என்ன நடந்தது?

பந்தநல்லூர் காவல்நிலையத்தில் சம்பவம் நடந்த 9ஆம் தேதியன்று பிரபாகரனின் சகோதரி பிரியங்கா அளித்த புகாரின் அடிப்படையில், மணிகண்டன், கார்த்தி ஆகியோர் மீது 342, 302, 109, எஸ்.சி, எஸ்.டி சட்டம் 2015 என நான்கு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்படுகிறது. காவல்துறை பதிவு செய்துள்ள முதல் தகவல் அறிக்கையில் உள்ள தகவல்கள் பின்வருமாறு:

` எனது தம்பி டிரைவர் வேலை பார்த்து சம்பாதித்து வந்தான். என் தம்பியை மூன்று மாதங்களுக்கு முன்பு காமாட்சிபுரத்தைச் சேர்ந்த மணிகண்டன் என்பவரது மகள் காதலித்து வந்தார். அவர், `என் தம்பியோடுதான் வாழ்வேன்' எனக் கூறி வீட்டுக்கே வந்துவிட்டார்.

அந்தப் பெண் வேற்று சமூகத்தைச் சேர்ந்தவர். இதன்பிறகு எனது வீட்டுக்கு வந்த அந்தப் பெண்ணின் தந்தை மணிகண்டன், `என் மகளோடு பேசுவதை நிறுத்தாவிட்டால் உன் சாவு என் கையில்தான்' எனக் கூறி என் தம்பியை மிரட்டிவிட்டு மகளை கூட்டிச் சென்றுவிட்டார். இதற்கு நாங்கள் எந்த எதிர்ப்பும் தெரிவிக்கவில்லை' எனக் குறிப்பிட்டுள்ளார்.

` கடந்த 10 நாள்களுக்கு முன்பு என்னுடைய மாமா ராமகிருஷ்ணனிடம், `என் மகளிடம் பழகுவதை நிறுத்தாவிட்டால் பிரபாகரனை கொலை செய்யுமாறு காவனூரை சேர்ந்த சீத்தாபதி சொல்லியிருக்கிறார். பிரபாகரனை நிறுத்திக் கொள்ளச் சொல்லுங்கள்' எனக் கூறியுள்ளார். கடந்த 9 ஆம் தேதி இரவு 7 மணியளவில் காமாட்சிபுரம் கோணுளாம்பள்ளம் ரோட்டில் வைத்து எனது தம்பி தலையில் பீர் பாட்டிலால் மணிகண்டன் அடித்துள்ளார்.

பின்னர், கார்த்திக் என்பவர் பிரபாகரனின் இரண்டு கைகளையும் பின்பக்கமாக இறுக்கிப் பிடித்துக் கொள்ள, மறைத்து வைத்திருந்த கத்தியால் இரண்டு முறை மணிகண்டன் குத்தினார்.

இதன்பின்னர் இரண்டு பேரும் ஆயுதத்தை எடுத்துக் கொண்டு சென்றுவிட்டனர். எனது தம்பி பிரபாகரனை சென்று பார்த்தபோது இடதுபக்க நெஞ்சில் ரத்த காயத்துடன் இருந்தார். கும்பகோணம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றபோது இறந்துவிட்டதாக அரசு மருத்துவர் தெரிவித்தார்' என முதல் தகவல் அறிக்கையில் பிரியங்கா குறிப்பிட்டுள்ளார்.   

தூண்டிவிட்டாரா தி.மு.க பிரமுகர்?  

இதுகுறித்து பிரியங்காவிடம் பிபிசி தமிழுக்காக பேசினோம். `` என் தம்பியும் அந்தப் பெண்ணும் ஆறு மாதங்களாக காதலித்து வந்தனர். இரண்டு முறை எங்களின் வீட்டுக்கே அந்தப் பெண் வந்துவிட்டார். அவரிடம் என் தம்பி, `உனக்கு இன்னும் 18 வயது ஆகவில்லை. அது பூர்த்தியானதும் திருமணம் செய்து கொள்கிறேன்' எனக் கூறி அவரது வீட்டுக்கு கொண்டு போய்விட்டார். அதன்பிறகும் அந்தப் பெண் தொடர்ந்து அவரது தோழியின் செல்போன் மூலம் பிரபாகரனிடம் பேசி வந்தார். இதனை அந்தப் பெண்ணின் அப்பா கண்டிக்காமல், என் தம்பியை மிரட்டினார். இதனால் பிரச்னை வரலாம் என எதிர்பார்த்தோம். ஆனால், கொலை வரையில் செல்லும் என நாங்கள் எதிர்பார்க்கவில்லை" என்கிறார்.  

தொடர்ந்து பேசிய பிரபாகரனின் உறவினர் குமார், `` இந்தச் சம்பவத்தில் கைதான கார்த்தி என்பவர், கடந்த ஒரு வாரமாக பிரபாகரனுக்கு மது வாங்கிக் கொடுத்துள்ளார். இவர்கள் இருவரும் நண்பர்களாகவும் இருந்துள்ளனர். கடந்த 9 ஆம் தேதி மாலை நேரம் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தவரை எழுப்பிக் கூட்டிப் போய் மது வாங்கிக் கொடுத்துள்ளனர். பின்னர் அங்கு வந்த மணிகண்டன், பிரபாகரனை கத்தியால் குத்திவிட்டார். அந்தப் பெண்ணின் அப்பாவுக்கு கொலை செய்யும் அளவுக்கு துணிச்சல் இல்லை. அவரை தி.மு.க ஒன்றிய கவுன்சிலர் சீத்தாபதிதான் தூண்டிவிட்டுள்ளார். அவரை போலீஸார் இன்னும் கைது செய்யவில்லை" என்கிறார்.

காவல் ஆய்வாளரின் பதில் என்ன?

  ``தூண்டுதலின் அடிப்படையில்தான் கொலை நடந்ததா?" என பந்தநல்லூர் காவல்நிலைய ஆய்வாளர் ஓம் பிரகாஷிடம் பிபிசி தமிழுக்காக பேசினோம். `` முதல் தகவல் அறிக்கையில் தெரிவித்துள்ள தகவலின்படிதான் சம்பவம் நடந்துள்ளது. அதேநேரம், தூண்டுதலின் அடிப்படையில் இந்தக் கொலை நடக்கவில்லை. பெண்ணின் தந்தையும் மற்றொருவரும்தான் இதனைச் செய்துள்ளனர்" என்கிறார்.

மேலும், `` இந்தச் சம்பவத்தில் தொடர்புடைய இரண்டு பேரை கைது செய்து ரிமாண்ட் செய்துள்ளோம். இந்தச் சம்பவத்தால் பாதிக்கப்பட்ட குடும்பத்துக்கு அரசுத் தரப்பில் இருந்து நிவாரண உதவிகள் சென்று சேர உள்ளது. அவர்கள், பிரபாகரனின் உடலை பெற்றுக் கொள்ளவும் வாய்ப்புள்ளது. இந்த விவகாரத்தில் தி.மு.க பிரமுகர் சீத்தாபதியின் தொடர்பு குறித்து முதல்கட்ட விசாரணையில் வெளிவரவில்லை" என்கிறார்.

இதையடுத்து, தி.மு.க ஒன்றிய கவுன்சிலர் சீத்தாபதியை தொடர்பு கொள்ள முயன்றும் பேச முடியாததால், தஞ்சை வடக்கு மாவட்ட தி.மு.க செயலாளர் கல்யாண சுந்தரத்திடம் பிபிசி தமிழுக்காக பேசினோம். `` இருவரும் அண்ணன், தங்கை போல பழகிவிட்டு காதலிப்பது தெரியவந்ததால் இந்தச் சம்பவம் நடந்ததாகக் கூறப்படுகிறது. இருப்பினும், கொலை கொலைதான். அந்த நபர் காதலித்தார் என்பதற்காக கொலை செய்துள்ளனர். இதில் சம்பந்தப்பட்ட நபர், தி.மு.கவினருடன் நட்பில் இருந்துள்ளார். அதனால், இந்த விவகாரத்தோடு இணைத்துப் பேசுகின்றனர். இதற்கும் கட்சிக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை. குறிப்பாக, சீத்தாபதிக்கும் இதற்கும் எந்தவிதத் தொடர்பும் இல்லை" என்கிறார்.