உக்ரைனின் கீவ் ரயில் நிலையம் மீது ரஷ்யா ஏவுகணை தாக்குதல் - உச்சக்கட்ட பதற்றம்
உக்ரைனின் கீவ் ரெயில் நிலையம் மீது ரஷியா ஏவுகணை தாக்குதல் நடத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
உக்ரைன் தற்போது நேட்டோ கூட்டமைப்புடன் சேர்வதற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது. இதனால் தங்கள் நாட்டு பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படலாம் என கூறிய ரஷ்யா உக்ரைன் மீது கடந்த 8வது நாளாக போர் தொடுத்து வருகிறது.
இரு தரப்பு மோதலில் பலர் உயிரிழந்துள்ள நிலையில் உக்ரைனில் இருந்து பெண்கள், குழந்தைகள் உள்பட ஆயிரக்கணக்கான மக்கள் வெளியேறி வருகின்றனர். குறிப்பாக தலைநகர் கீவ்வில் உள்ள ரயில் நிலையத்தில் இருந்து இயக்கப்படும் ரயில்களில் ஏறி ஆயிரக்கணக்கான மக்கள் அண்டை நாடுகளுக்கு செல்லும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதனால் அங்கு மக்கள் கூட்டம் நிரம்பி வழிகிறது. இந்நிலையில் கீவ் தெற்கு ரெயில் நிலையம் மீது ரஷியா இன்று ஏவுகணை தாக்குதல் நடத்தியுள்ளதாக உக்ரைன் தெரிவித்துள்ளது.
ரயில் நிலையத்திற்கும் அதன் அருகே உள்ள இபிஸ் ஓட்டலுக்கும் இடையேயான பகுதியில் இந்த ஏவுகணை தாக்குதல் நடைபெற்றதாகவும், இந்த தாக்குதலில் ரயில் நிலையத்தின் ஒரு பகுதி சேதமடைந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரஷ்யாவின் இந்த ஏவுகணை தாக்குதலில் உயிரிழப்பு ஏதேனும் நிகழ்ந்துள்ளதா? என்பது குறித்த தகவல் தற்போது வரை வெளியாகவில்லை.