அடுத்த 10 நாட்களுக்கு மின்தடை இருக்கும் - அமைச்சர் செந்தில் பாலாஜி தகவல்
தமிழ்நாடு முழுவதும் கடந்த 9 மாதங்களாக மின் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படவில்லை என அமைச்சர் செந்தில்பாலாஜி தெரிவித்துள்ளார்.
சென்னை அண்ணா சாலையில் உள்ள மின்உற்பத்தி மற்றும் மின்பகிர்மான கழக தலைமை அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், கடந்த 9 மாத காலமாக அதிமுக அரசு எந்த மின் பராமரிப்பு பணிகளையும் மேற்கொள்ளவில்லை என்றும், அத்தியாவசிய பராமரிப்பு பணிகளை பத்து நாட்களுக்குள் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
அதன் பின்னர் முன்னறிவிப்பின்றி மின்தடை இருக்காது என்றும், குறிப்பிட்ட பகுதிகளில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளும் போது எத்தனை மணிக்கு பராமரிப்பு பணிகள் நடைபெறும் என்பது முன்கூட்டியே பொதுமக்களுக்கு அறிவிக்கப்படும் என்றும் செந்தில் பாலாஜி கூறினார்.
மேலும் கூடுதல் மின்கட்டணம் தொடர்பாக இதுவரை 10 லட்சம் புகார்கள் வந்துள்ளதாகவும், அதன் மீது விரைந்து நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், மேலும் மின் கட்டணம் செலுத்த அரசு அறிவித்த வழிமுறைகளை பின்பற்றி கூடுதல் கட்டணம் செலுத்துவதை மக்கள் தவிர்க்கலாம் என அமைச்சர் செந்தில்பாலாஜி தெரிவித்துள்ளார்.