டெல்லியில் ஆளுநருக்கே அதிகாரம்: சட்டத்தை நிறைவேற்றிய மத்திய அரசு
டெல்லியில் துணை நிலை ஆளுநருக்கு அதிக அதிகாரம் வழங்கும் மசோதாவை மத்திய அரசு நாடாளுமன்றத்தில் நிறைவேற்றியுள்ளது. டெல்லி ஆம் ஆத்மி இரண்டாவது முறையாக ஆட்சியில் இருந்து வருகிறது. ஆனால் பாஜகவுக்கும் கெஜ்ரிவாலுக்கும் இடையே கடந்த் ஆறு ஆண்டுகளாக மோதல் போக்கே நிலவியது.
மத்திய அரசை எதிர்த்து கெஜ்ரிவால் தர்ணாவில் ஈடுபட்டார். துணை நிலை ஆளுநருக்கும் டெல்லி அரசுக்கும் இடையே நிலவி வந்த அதிகாரப் போட்டியை உச்சநீதிமன்றம் தீர்த்து வைத்தது. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட டெல்லி அரசுக்கே அதிகாரம் என உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியிருந்தது. ஆனால் தற்போது மத்திய அரசால் நியமிக்கப்படும் துணை நிலை ஆளுநருக்கே டெல்லியில் அதிக அதிகாரம் என மத்திய அரசு சட்டம் நிறைவேற்றியுள்ளது.
இதன்மூலம் எந்தவொரு நிா்வாக நடவடிக்கை தொடா்பாக முடிவு எடுக்கும் முன்னா், அதுகுறித்து துணைநிலை ஆளுநரின் கருத்தை தில்லி அரசு பெற வேண்டியதும் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இந்த மசோதா மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டு மார்ச் 22-ம் தேதி மக்களவையிலும், கடும் அமளிக்கு மத்தியில் மாநிலங்களவையிலும் புதன்கிழமை அன்றும் நிறைவேற்றப்பட்டது.
இது தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால், துணை நிலை ஆளுநருக்கு கூடுதல் அதிகாரம் வழங்கும் மசோதா நிறைவேற்றபட்டது ஜனநாயகத்திற்கு ஏற்பட்ட மோசமான நாளாகும் எனக் குறிப்பிட்டார்.
'மக்களுக்கான அதிகாரத்தை மீட்டெடுப்பதற்கான எங்கள் போராட்டத்தை நாங்கள் தொடருவோம். என்ன தடைகள் இருந்தாலும், நாங்கள் தொடர்ந்து எங்கள் பணிகளைச் செய்வோம்" என கேஜரிவால் தெரிவித்துள்ளார்.
இந்த மசோதாவை நிறைவேற்ற காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.