6 மாதம் மட்டும் என்னிடம் ஆட்சியை கொடுத்து பாருங்க.. அன்புமணி ராமதாஸ்
என்னிடம் ஆட்சியை கொடுத்தால் 6 மாதங்களில் வைகை ஆற்றை சுத்தப்படுத்துவேன் என தெரிவித்துள்ளார்.
6 மாத ஆட்சி
பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் மதுரை பொதுக்கூட்டத்தில் உரையாற்றினார். அப்போது பேசிய அவர், “தென்மாவட்டங்கள் வளம்பெற வேண்டும், தொழிற்சாலைகள் தொடங்க வேண்டும்.
ஒரு காலத்தில் வைகை ஆற்றின் தண்ணீரில் கை வைத்தால், அந்த தண்ணீர் அவ்வளவு அழகாகவும், சுவையாகவும் இருக்கும். ஆனால் இன்று நாம் வைகை ஆற்றில் கை வைத்தால் சொரி சிரங்கு எல்லாம் வந்துவிடும்.
அன்புமணி கோரிக்கை
அப்படிப்பட்ட தண்ணீரில்தான் நமது கள்ளழகர் இறங்குகிறார். அவருடன் சேர்ந்து 5 லட்சம் மக்களும் இறங்குகிறார்கள். வைகை ஆறு இன்று வெறும் சாக்கடையாக மாறியிருக்கிறது. நீங்கள் குளிக்கும் தண்ணீர் இல்லை, அதைவிட மோசமான, என்னால் சொல்ல முடியாத கழிவுகள் எல்லாம் வைகை ஆற்றில் கலக்கின்றன.
மேகமலையில் உள்ள வெள்ளிமலையில் உற்பத்தியாகும் வைகை ஆற்றில், சுமார் 6 அணைகள் உள்ளன. அவை கர்மவீரர் காமராஜர் கட்டிய அணைகள். வைகை ஆறு இயற்கை நமக்கு கொடுத்த வரமாகும். அந்த வைகை ஆற்றை தி.மு.க. அரசு காப்பாற்றவில்லை.
வைகை ஆற்றை காப்பாற்ற முடியாதவர்களுக்கு ஆட்சி செய்வதற்கான தகுதி கிடையாது. என்னிடம் ஆட்சியை கொடுத்தால் 6 மாதங்களில் வைகை ஆற்றை சுத்தப்படுத்துவேன். அதை என்னால் மிக சாதாரணமாக செய்துவிட முடியும்.” எனத் தெரிவித்துள்ளார்.