மின்வெட்டு..நிலக்கரியை இறக்குமதி செய்ய முதலமைச்சர் உத்தரவு - அமைச்சர் செந்தில் பாலாஜி..!
தமிழகத்தில் மின் தடை தொடர்பாக அதிமுக கவன ஈர்ப்பு தீர்மானத்தை கொண்டு வந்தது. இதற்கு மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி பதில் அளித்து பேசினார்.
தமிழகத்தின் சராசரி மின்நுகர்வு என்பது கடந்த 18.04.2022 ஆம் அன்று 317 மில்லியன் யூனிட்டாக இருந்தது 19.04.2022 அன்று 343 மில்லியன் யூனிட்டாக உயர்ந்துள்ளது.
20.04.2022 அன்று 347 மில்லியன் யூனிடாகவும் 21.04.2022 நேற்று 363 மில்லியன் யூனிட்டாகவும் மின் நுகர்வு உயர்ந்தன. தனியாரிடம் இருந்து குறைந்த விலையில் மின்சாரங்கள் பெறப்பட்டு வருகின்றன.
குறிப்பாக மத்திய தொகுப்பில் கிடைக்க வேண்டிய மின்சாரம் கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பாக குறிப்பாக ஒரே நாளில் 796 மெகாவாட் அளவுக்கு தடை ஏற்பட்டது.
அந்த தடை ஏற்பட்ட சில மணி நேரங்களில் முதலமைச்சர் இதை உடனடியாக சரிசெய்ய வாரியத்துக்கு உத்தரவுகளை வழங்கினார்கள்.
4837 மில்லியன் யூனிட் நமது சொந்த உற்பத்தி அதிகரிக்கப்பட்டுள்ளது.நிலக்கரி பற்றாக்குறை இருந்த போதும் கூட,இறக்குமதி நிலக்கரி பற்றாக்குறை கடுமையாக உயர்ந்த போதும் கூட,இறக்கு மதி நிலக்கரிகள் கடுமையாக உயர்ந்த போதும் கூட முதலமைச்சர் ஆட்சி ஏற்ற பின் ஒரு டன் நிலக்கரி கூட இறக்குமதி செய்யவில்லை.
நம்முடைய உள்நாட்டு நிலக்கரியை கொண்டு இந்த உற்பத்திகள் 31 விழுக்காடு அதிகரிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
தமிழகத்துக்கு நாள் ஒன்றுக்கு 72 ஆயிரம் டன் நிலக்கரி தேவைப்படுகிறது. நாள் ஒன்றுக்கு 48 ஆயிரம் முதல் 50 ஆயிரம் டன் நிலக்கரியை வழங்கி வந்த நிலையில் குறைவான நிலக்கரியை தற்போது வழங்கி வருகிறது.
மின்பற்றாக்குறையை சமாளிக்க 3,000 மெகாவாட் மின்சாரம் தனியாரிடம் இருந்து கொள்முதல் செய்யப்படுகிறது.
ஏப்ரல் - மே மாதத்திற்கான நிலக்கரி 4 லட்சத்து 80 ஆயிரம் டன் நிலக்கரி இறக்குமதி செய்வதற்கான ஒப்பந்த புள்ளிகள் கோரப்பட்டன.
இதில் 4 நிறுவனங்கள் பங்கேற்றன.143 டாலர் என்ற நிலையில் ஒப்பந்தங்கள் போடப்பட்டு நிலக்கரி இறக்குமதி செய்யும் பணிகள் நடைபெற்று வருவதாக தெரிவித்தார்.
இரண்டு நாட்களாக ஏற்பட்ட மின்வெட்டு மத்திய தொகுப்பில் இருந்து மின்சாரம் கிடைக்காததால் ஏற்பட்டது. மேலும் தற்போது வரை அந்த மின்சாரம் இந்த நிமிடம் வரை கிடைக்கவில்லை என்றார்.
நகர்புறத்தில் ஒரு மணி நேரத்திற்கு உள்ளாகவும்,அதே நேரத்தில் ஊரக பகுதிகளிலும் விரைந்து சரி செய்யும் பணிகள் விரைந்து எடுக்கப்பட்டன.
41 இடங்களில் மட்டுமே மின் விநியோகம் தடைபட்டதாக அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்தார். இரண்டு நாட்கள் ஏற்பட்ட மின்வெட்டு மத்திய தொகுப்பில் இருந்து கிடைக்காதது தான் காரணம் என்றார்.
எதிர்க்கட்சி அதிமுக ஐடி செல்லை பயன்படுத்தி இல்லாத ஒன்றை இருப்பதாக அவர்கள் மக்கள் மத்தியில் ஒரு விஷம பிரச்சாரத்தை முன்னெடுக்க நினைக்கிறார்கள் என்று குற்றம் சாட்டினார்.