தமிழக சட்டப்பேரவைக்கான தபால் வாக்குபதிவு இன்று முதல் தொடக்கம்
தமிழக சட்டப்பேரவைக்கான தபால் வாக்குப்பதிவு இன்று முதல் தொடங்குகிறது. கொரோனா பரவல் காலத்தில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெறுவதால், 80 வயதுக்கு மேற்பட்டவர்கள், மாற்றுத்திறனாளிகள் மற்றும் கொரோனா பாதித்தவர்கள் தபால் வாக்குகளை அளிக்கும் வசதியை தேர்தல் ஆணையம் வழங்கியுள்ளது.
இதன்படி தமிழகம் முழுவதும் 2,44,000 பேர் தபால் வாக்கு செலுத்த விண்ணப்பத்திருந்தனர், சென்னையில் மட்டும் 12,000 பேர் விண்ணப்பத்திருந்தனர். இதனையடுத்து சென்னையில் மட்டும் தபால் வாக்குகளை பெற 70 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ள நிலையில், ஒவ்வொரு குழுவும் நாளொன்றுக்கு 15 வாக்குகளை பெற ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்த குழுக்களில் வாக்குப்பதிவு அலுவலர்கள் 3 பேர், நுண் பார்வையாளர், காவலர், வீடியோ ஒளிப்பதிவாளர் ஆகியோர் இடம்பெறுவர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் தபால் வாக்களிப்பவர்களுக்கான தேதி, நேரம் ஆகியவை முன்கூட்டியே செல்போன்களுக்கு குறுஞ்செய்தியாக அனுப்பி வைக்கப்படும் எனவும், வீடுகளுக்கு நேரடியாக சென்று அதிகாரிகள் ஆய்வு செய்த பின், வாக்குச்சீட்டு வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.