திருடனாக சித்தரிக்கப்பட்ட அமைச்சர் சேகர்பாபு - கோவை இந்து முன்னணியின் அதிரடி போராட்டம்
அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபுவை திருடனாக சித்தரித்து கோவை இந்து முன்னணியினர் போராட்டம் நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக அமைச்சரவையில் அதிக கவனத்தை ஈர்க்கும் அமைச்சர்களில் ஒருவராக அறநிலையத் துறை அமைச்சர் சேகர் பாபு உள்ளார். பதவியேற்றத்தில் இருந்து ஊர் ஊராக சென்று கோயில்களில் அதிரடி ஆய்வு மேற்கொண்டு வருகிறார். அதனால் பல கோயில்களுக்கு சொந்தமான பல கோடி ரூபாய் மதிப்பிலான ஆக்கிரமிப்பு நிலங்கள் மீட்கப்பட்டுள்ளன.
மேலும் கோவில் நகைகளை தங்ககட்டிகளாக மாற்றும் திட்டமும் சமீபத்தில் தொடங்கப்பட்டது. இந்தத் திட்டத்துக்கு பாஜக உள்ளிட்ட கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.இந்த நிலையில்,அறநிலையத் துறை அமைச்சர் சேகர் பாபு கோவில் நகைகளை திருடுவது போன்று சித்தரித்து கோவையில் இந்து முன்னணியினர் நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கோவை கோனியம்மன் ஆலயம் முன்பு இந்து முன்னணி மாநிலத் தலைவர் கடேஸ்வரா சுப்பிரமணியம் தலைமையில் கோவில் நகைகளை தங்ககட்டிகளாக மாற்றும் திமுக அரசை கண்டித்து நூதன போராட்டத்தில் அவர்கள் ஈடுபட்டனர். கோவிலின் முன்பு வாகனத்தில் அலங்கரித்து வைத்திருந்த அம்மன் சிலையிலிருந்து திமுக அமைச்சர் சேகர் பாபு தங்க நகையை திருடுவது போன்று சித்தரித்து போராட்டத்தை நடத்தியதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.