அமைச்சர் பங்கேற்ற விழாவில் ஒளிபரப்பப்பட்ட ஆபாச படம் - பொதுமக்கள் அதிர்ச்சி
மத்திய அமைச்சர் ராமேஸ்வர் பங்கேற்ற நலத்திட்ட விழா ஒன்றில் ஆபாச படம் ஒளிபரப்பானது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அசாம் மாநிலம் டின்சுகியா என்ற பகுதியில் நலத்திட்ட பணிகளை மத்திய இணை அமைச்சர் ராமேஸ்வர் டெலி தொடங்கி வைக்க வருகை தந்தார். அதில் ஒன்றான இந்தியன் ஆயில் நிறுவனத்தில் மெத்தனால் கலந்த எம்-15 ரக பெட்ரோல் தயாரிக்கும் திட்டத்தை அவர் தொடங்கி வைத்தார்.
இந்த தொடக்க விழா அங்குள்ள ஹோட்டல் ஒன்றில் நடந்த நிலையில், இந்நிகழ்ச்சியில் நிதி ஆயோக் உறுப்பினர் விகே சரஸ்வத், இந்தியன் ஆயில் தலைவர் எஸ்எம் வைத்தியா, மாநில அமைச்சர் சஞ்சோய் கிசான் மற்றும் மூத்த அதிகாரிகள் ஆகியோர் பங்கேற்றனர். அப்போது திட்டம் தொடர்பான விளக்கங்களுடன் கூடிய காணொளியை ஒளிபரப்ப அங்கு ப்ரொஜெக்ட்டர் திரை அமைக்கப்பட்டிருந்தது.
இதனிடையே திட்டத்தை தொடங்கி வைத்து விருந்தினர்கள் மேடையில் பேசிக்கொண்டிருந்த போது அந்த திரையில் தவறுதலாக ஆபாச பட காட்சிகள் ஓடியுள்ளது. இதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த பார்வையாளர்கள் உடனடியாக ஆபரேட்டரிடம் தகவல் தெரிவித்தனர். இதனால் சில விநாடிகள் ஓடிய வீடியோ நிறுத்தப்பட்டது.
இதனையடுத்து ப்ரொஜெக்ட்டர் ஆபரேட்டரை கைது செய்த காவல்துறை இதுதொடர்பாக விசாரணை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் நான் விருந்தினர் பேச்சை கேட்டுக்கொண்டிருந்தேன். நான் திரையை கவனிக்கவில்லை. அப்போது எனது உதவியாளர் அருகே வந்து நிகழ்ந்ததை தெரிவித்தார். நான் அருகே இருந்த காவல் ஆணையரிடம் உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு தெரிவித்துள்ளேன் என அமைச்சர் ராமேஸ்வர் டெலி கூறியுள்ளார்.