2 குழந்தைகளுக்கு மேல் பெற்றால் அரசு வேலை, மானியம் இல்லை..எங்கே தெரியுமா?
உத்தரபிரதேச மக்கள் தொகை வரைவு மசோதாவில் 2 குழந்தைகளுக்கு மேல் இருந்தால் அரசு வேலைகள் இல்லை , அரசு மானியம் கிடைக்காது உள்ளாட்சி அமைப்பு தேர்தல்களில் போட்டியிட முடியாது எனகூறப்பட்டு உள்ளது.
இரண்டு குழந்தைகளுக்கு மேல் பெற்றவர்களுக்கு அரசு நலத்திட்டங்களை குறைத்தல், உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட தடை உள்ளிட்டவை உத்தரபிரதேச அரசின் மக்கள் தொகை கட்டுப்பாட்டு வரைவு மசோதாவில் இடம் பெற்றுள்ளன.
உத்தேச மக்கள்தொகை கட்டுப்பாட்டு மசோதாவின் வரைவின் படி, உத்தரபிரதேசத்தில் இரு குழந்தைக் கொள்கையை மீறும் எவரும் உள்ளாட்சி அமைப்புகளின் தேர்தலில் போட்டியிடுவதிலிருந்தும், அரசு வேலைகளில் பதவி உயர்வு பெறுவதிலிருந்தும் அல்லது எந்தவொரு அரசாங்க மானியத்தையும் பெறுவதிலிருந்து தடை செய்யப்படுவார்கள் என கூறப்பட்டு உள்ளது.
2 குழந்தைகளுக்கு மேல் இருந்தாலும் 4 பேருக்கான ரேஷன் கார்டு மட்டுமே வழங்கப்படும், அவர்கள் அரசு வேலைக்கு விண்ணப்பிக்க முடியாது ஆகிய அம்சங்களும் அதில் இடம் பெற்றுள்ளன.
மாநில சட்ட ஆணையம், உத்தரபிரதேச மாநில மக்கள் தொகை கட்டுப்பாட்டில் மற்றும் மக்கள் நலனில் அக்கறையோடு செயல்பட்டு வருகிறது. அதற்காக உத்தேச மக்கள்தொகை கட்டுப்பாட்டு மசோதாவை தயாரித்து உள்ளது. வரைவு மசோதாவை மேம்படுத்த பொதுமக்களிடமிருந்து பரிந்துரைகள் கேட்கப்படுகின்ற அதற்கான கடைசி தேதி ஜூலை 19 என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இரண்டு குழந்தை விதிமுறைகளை பின்பற்றும் அரசு ஊழியர்களுக்கு முழு சேவையின் போது இரண்டு கூடுதல் ஊதிய உயர்வுகள் கிடைக்கும், மகப்பேறு அல்லது விடுப்பு 12 மாதங்கள், முழு சம்பளம் மற்றும் அலவனஸ் மற்றும் தேசிய ஓய்வூதிய திட்டத்தின் கீழ் முதலாளியின் பங்களிப்பு நிதியில் மூன்று சதவீதம் அதிகரிக்கும். ஒரே குழந்தையுடன் நிறுத்திக் கொள்பவர்களுக்கு இவை தவிர மேலும் பல சலுகைகள் வழங்கப்படும் எனவும் வரைவு மசோதாவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
வரைவு மசோதா அனைத்து ஆரம்ப சுகாதார மையங்களிலும் மகப்பேறு மையங்கள் நிறுவப்படும் என்று கூறுகிறது. இந்த மையங்கள் மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் கருத்தடை மாத்திரைகள், ஆணுறைகள் போன்றவற்றை விநியோகிக்கும். சமூக சுகாதார பணியாளர்கள் மூலம் குடும்பக் கட்டுப்பாடு முறைகள் குறித்த விழிப்புணர்வைப் பரப்புவதோடு, மாநிலம் முழுவதும் கர்ப்பம், பிரசவம், பிறப்பு மற்றும் இறப்புகளை கட்டாயமாக பதிவு செய்வதை உறுதி செய்யும்.
அனைத்து மேல்நிலைப் பள்ளிகளிலும் மக்கள் தொகை கட்டுப்பாடு தொடர்பான கட்டாய பாடத்தை அறிமுகப்படுத்துவது அரசாங்கத்தின் கடமையாகும் என அதில் கூறப்பட்டு உள்ளது.