சம்பளம் கொடுக்காத பிரபல செய்தி நிறுவனம் - அலுவலகத்திலேயே தலைமை நிர்வாகி தூக்கிட்டுத் தற்கொலை - அதிர்ச்சி சம்பவம்
UNI செய்தி நிறுவனத்தின் சென்னை பிரிவு தலைமை நிர்வாகி குமார் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
கடந்த 25 ஆண்டுக்கும் மேலாக யு.என்.ஐ செய்தி நிறுவனத்தில், புகைப்படக் கலைஞராக பணியாற்றியவர் குமார். இவர் சிறந்து பணியாற்றியதால், உயர்ந்த தலைமைப் பொறுப்புக்கு முன்னேறினார்.
UNI செய்தி நிறுவனத்தில் நாடு முழுவதும் பணியாளர்கள் வேலை பார்த்து வருகிறார்கள். ஆனால், அந்நிறுவனத்தின் ஊழியர்களுக்கு ஊதியம் வழங்குவதில்லை என்று சொல்லப்படுகிறது. முறையாக சம்பளம் அந்நிறுவனம் வழங்காததால், குமார் கடந்த சில மாதங்களாக மன அழுத்தத்திற்க்கு தள்ளப்பட்டுள்ளார்.
இந்நிலையில், நேற்றிரவு நுங்கம்பாக்கத்தில் உள்ள அலுவலகத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதைப் பார்த்தவர்கள் அதிர்ச்சி அடைந்து சக பணியாளர்கள், போலீசார் தகவல் கொடுத்தனர்.
சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இச்சம்பவம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
குமார் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும் என்றும், சம்பந்தப்பட்ட செய்தி நிறுவனம் ஒரு கோடி ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும் என்றும் சக ஊழியர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
மேலும், அச்சு, காட்சி ஊடக நிறுவனங்கள் அவர்களது பணியாளர்களுக்கு சரியான ஊதியத்தை குறித்த காலத்தில் வழங்கி வருகிறதா என்பது குறித்து ஐ.ஏ.எஸ் அதிகாரி தலைமையில் ஒரு குழு அமைத்து தீவிரமாக கண்காணிக்க வேண்டும் என்றும், சம்பளம் கொடுக்காமல் வரும் ஊடக நிறுவனங்கள் மீது தமிழக அரசு கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை வைத்துள்ளனர்.