'கிளியே கிளியே' - 40 வருஷத்துக்கு பிறகு ட்ரெண்டாகும்னு எதிர்ப்பார்க்கல - பூர்ணிமா பாக்கியராஜ்!
சமூக வலைத்தளங்களில் ட்ரெண்டிங்கில் இருக்கும் 'கிளியே கிளியே' என்ற பாடல் குறித்து நடிகை பூர்ணிமா பாக்கியராஜ் பேசியுள்ளார்.
'கிளியே கிளியே'
இன்ஸ்டாகிராம் ரீல்ஸில் அவ்வப்போது சில பாடல்கள் ட்ரெண்டாகிறது. சற்றும் எதிர்பாராமல் நாம் கேட்டு மறந்த பாடல்களையெல்லாம் ட்ரெண்ட் செய்து விடுவார்கள். அதில் அதிகமாக ட்ரெண்டாவது பழைய பாடல்கள்தான்.
அந்த வகையில் சமீபத்தில் கிளியே "கிளியே கிளியே மணி மணி மேகத் தோப்பில்" என்ற பாடலைத்தான் இளைஞர்கள் அதிகமாக பயன்படுத்தி வைப் செய்து வருகின்றனர். இந்த பாடலானது கடந்த 1983ம் ஆண்டு வெளியான 'ஆ ராத்திரி' என்ற மலையாள படத்தில் இடம் பெற்ற பாடலாகும். இப்படத்தில் நடிகர் மம்மூட்டி மற்றும் நடிகை பூர்ணிமா பாக்கியராஜ் இனைந்து நடித்துள்ளனர். படத்தின் இசையமைப்பாளர் இசைஞானி இளையராஜா.
இந்நிலையில் இந்த பாடல் 40 ஆண்டுகள் கழித்து சமூக வலைத்தளங்களில் ட்ரெண்டாவது குறித்து நடிகை பூர்ணிமா பாக்கியராஜ் பேசியுள்ளார். அவர் பேசியதாவது "இத்தனை வருசம் கழிச்சு இந்தப் பாடல் இப்போ கொண்டாடப்படுறது நெகிழ்வாவும் சந்தோஷமாவும் இருக்கு.
பூர்ணிமா பாக்கியராஜ் பேட்டி
குடும்பத்தோட பிக்னிக் போகும்பொது வரக்கூடிய சந்தோஷமான பாட்டு அது. பெருசா டான்ஸ் மூவ்மெண்ட் எல்லாம் கிடையாது. அதனால, ரெண்டே நாள்ல 'கிளியே கிளியே' பாட்டை எடுத்து முடிச்சுட்டாங்க. அப்பவே, ஷூட்டிங்ல இந்தப் பாட்டை ஜாலியா பாடிக்கிட்டிருப்போம்.
இப்போ 40 வருஷத்துக்கப்புறம் டிரெண்டிங்ல வரும்னு எதிர்பார்க்கவே இல்ல. 'அம்மா உங்கப் பாட்டு ட்ரெண்டிங்ல இருக்கு'ன்னு என் பிள்ளைங்களே ஆச்சர்யப்பட்டு சொல்றாங்க. அது எப்படி நடக்குதுன்னே தெரியல.
ராஜா சாரோட இனிமையான இசையில ஜானகி மேடம் அற்புதமா பாடியிருந்தாங்க. இப்போ, இருக்கிற மாதிரி சோசியல் மீடியால்லாம் அப்போ இருந்திருந்தா 'கிளியே கிளியே' இன்னும் பெரிய ரீச் ஆகியிருக்கும். எப்படியோ இப்போ தோண்டியெடுத்துட்டாங்க. அதுல, எனக்குப் பெரிய சந்தோஷம்தான்" என்று பேசியுள்ளார்.