ஏழை நாடுகளுக்கு கொரோனா தடுப்பூசி வழங்குவதில் நெருக்கடி - ஐ.நா கவலை
கொரோனா வைரஸ் பரவத் தொடங்கி ஒரு வருடத்தை கடந்த பிறகும் தற்போது வரை வீரியம் குறையாமல் கொரோனா பரவி வருகிறது.
பல்வேறு நாடுகளில் கொரோனா இரண்டாவது, மூன்றாவது அலை பரவி வருகிறது. அதே சமயம் கொரோனாவுக்கான தடுப்பூசி செலுத்தும் பணியும் ஒருபக்கம் நடைபெற்று வருகிறது.
ஆனால் பெரும்பாலும் பணக்கார நாடுகளே கொரோனா தடுப்பூசிகளை பெற்று வருவதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.
இந்த ஏற்றத்தாழ்வுகளை போக்க ஐ.நா கோவேக்ஸ் என்கிற திட்டத்தை தொடங்கியிருந்தது. இதன்மூலம் ஏழை நாடுகளுக்கும் சமமாக கொரோனா தடுப்பூசி கிடைத்திட வழி வகுக்க முடியும் என்பதே திட்டம்.
பல்வேறு உலக நாடுகளும் இதற்காக நிதியுதவியும் கொரோனா தடுப்பூசிகளை நன்கொடையாகவும் வழங்கி வந்தன.
ஆனால் தற்போது இதற்கு தட்டுப்பாடு எழுந்துள்ளதாக ஐ.நா தெரிவித்துள்ளது. மேற்கொண்டு 3 பில்லியன் டாலர் நிதியுதவி கிடைத்தால் தடுப்பூசிகளை பெற்று வழங்க முடியும் என்றும் தெரிவித்துள்ளது. இதனால் ஆப்பிரிக்க நாடுகளுக்கு தடுப்பூசி கிடைப்பது மிகவும் தாமதமாகும் என்றும் சொல்லப்படுகிறது.