ஆழ்கடலிலும் தமிழர் வரலாறு; 15 ஆயிரம் ஆண்டு பழமை - திகிலூட்டும் தகவல்!
பூம்புகாரில் ஆழ்கடல் ஆய்வுப் பணிகள் தொடங்கியுள்ளன.
ஆழ்கடல் ஆய்வு
2025-26 நிதியாண்டிற்கான பட்ஜெட்டில் பூம்புகார் முதல் நாகப்பட்டினம் வரை ஆழ்கடலில் அகழாய்வுப் பணி மேற்கொள்ளப்படும் என்று தமிழ்நாடு அரசு அறிவித்தது.
அதன்படி, இந்திய கடல்சார் பல்கலைக்கழகத்துடன் இணைந்து தமிழ்நாடு தொல்லியல் துறை சார்பில், பூம்புகாரில் ஆழ்கடல் ஆய்வுப் பணிகள் தொடங்கியுள்ளன. இப்பணியை பேராசிரியர் கே.ராஜன் மற்றும் தொல்லியல் துறை இணை இயக்குநர் சிவானந்தம் ஆகியோர் அடங்கிய வல்லுநர் குழு மேற்கொண்டுள்ளனர்.
இது தொடர்பான புகைப்படங்களைத் தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ள தொல்லியல்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, பழம்தமிழர்களின் பாரம்பரியத்தை உலகறியச் செய்வதில் முதலமைச்சரின் ஈடுபாட்டிற்கு இந்த ஆய்வு சிறந்த எடுத்துக்காட்டு என்று குறிப்பிட்டார்.
முதல்வர் பெருமிதம்
இந்நிலையில், கீழடி தம் தாய்மடி எனச் சொன்னோம், இரும்பின் தொன்மையை உலகுக்கு உணர்த்தினோம், அதன் அடுத்தப்படியாக, வளம் பெற்ற பூம்புகாரின் பெருமையை வெளிக்கொணர்வோம் என்று பட்டினப்பாலையில் இடம்பெற்ற "நீரின் வந்த நிமிர்பரிப் புரவி" என்ற பாடல் வரிகளை மேற்கோள் காட்டி முதல்வர் ஸ்டாலின் பெருமிதம் தெரிவித்துள்ளார்.
#கீழடி நம் தாய்மடி எனச் சொன்னோம்!
— M.K.Stalin - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் (@mkstalin) September 20, 2025
இரும்பின் தொன்மையை உலகுக்கு உணர்த்தினோம்!
அடுத்து, "நீரின் வந்த நிமிர்பரிப் புரவியும், காலின் வந்த கருங்கறி மூடையும்..." என நிறைந்து வளம்பெற்ற பூம்புகாரின் பெருமையை வெளிக்கொணர்வோம்!!! https://t.co/7qF66trcFo
`பூம்புகார் துறைமுக நகரமானது 15,000 ஆண்டுகள் பழைமையானது. தற்போதைய காவிரிப் பூம்பட்டினத்தில் இருந்து கடலுக்குள் சுமார் 30 முதல் 40 கி.மீ தூரத்தில் பூம்புகார் நகரம் புதையுண்டு கிடக்கிறது. இந்தத் துறைமுகம் சுமார் 11 கி.மீ நீளத்துக்கு இருந்திருக்கிறது.
ஒரே நேரத்தில் 70, 80 கப்பல்கள் வந்து நிற்கும் வசதிகள் இருந்துள்ளன. கப்பல்கள் எளிதாகத் திரும்புவதற்கு ஏற்றபடி கால்வாய்களும் இருந்தன'' என்று திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் தொலை உணர்வுத் துறை பேராசிரியரும் பூம்புகார் ஆய்வுத்திட்ட தேசிய ஒருங்கிணைப்பாளருமான சோம.இராமசாமி தெரிவித்துள்ளார்.