இப்படி பேச அசிங்கமா இல்லையா? - இங்கிலாந்து கேப்டனை விமர்சித்த ரிக்கி பாண்டிங்
ஆஷஸ் தொடரில் தோல்விக்கு காரணம் கூறிய இங்கிலாந்து கேப்டனை ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங் கடுமையாக விமர்சித்துள்ளார்.
ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அணி 5 போட்டிகள் கொண்ட ஆஷஸ் டெஸ்ட் தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது. இவ்விரு அணிகளுக்கும் இடையே நடைபெற்று முடிந்த முதலாவது டெஸ்ட் போட்டியில் 9 விக்கெட் வித்தியாசத்தில் எளிதாக வெற்றி பெற்ற ஆஸ்திரேலிய அணி 2வது டெஸ்ட் போட்டியிலும் அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்தி 275 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
இதனால் 5 போட்டிகள் கொண்ட தொடரில் ஆஸ்திரேலிய அணி 2-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது. இதனிடையே இரண்டாவது போட்டியில் ஏற்பட்ட தோல்வி குறித்து பேசிய இங்கிலாந்து கேப்டன் ஜோ ரூட் கூறுகையில் நாங்கள் பந்துவீச்சில் சரியாக செயல்படவில்லை. 4 ஆண்டுகளுக்கு முன்னர் என்ன தவறுகள் செய்து இருந்தோமோ அதே போன்று தற்போது பந்துவீச்சில் தவறுகளை செய்து வருகிறோம்.
அது மிகவும் வருத்தத்துக்குரியது. மேலும் பேட்டிங்கிலும் இன்னும் சிறப்பாக செயல்பட்டிருக்க வேண்டும். ஆனால் அதுவும் எங்களால் முடியாமல் போனது. எங்களிடம் அவர்களை வீழ்த்துவதற்கு தேவையான அனைத்து திறன்களும் இருந்தும் நான்கு ஆண்டுகளுக்கு முன்னர் செய்த அதே தவறை மீண்டும் செய்திருப்பதால் தோல்வியை சந்தித்து இருக்கிறோம் என கூறினார். ஜோ ரூட்டின் இந்த கருத்துக்கு ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங் கடுமையாக விமர்சித்துள்ளார்.
நான்கு ஆண்டுகளுக்கு முன்னர் செய்த தவறை திரும்ப செய்திருக்கிறோம் என்று கூறியுள்ளீர்கள். அதை திருத்தி அமைக்க வேண்டியது யாருடைய பொறுப்பு. அணியின் கேப்டன் நீங்கள்தானே? உங்களது பவுலர்கள் சரியாக செயல்படவில்லை என்றால் நீங்கள் தான் திட்டங்களை வகுத்து கொடுத்து சரியாக பந்து வீசவைக்க வேண்டும். ஒரு கேப்டனாக களத்தில் நீங்கள் என்ன செய்து கொண்டிருந்தீர்கள்? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
ஒரு கேப்டனாக களத்தில் நீங்கள் நிற்கும் போது உங்களது பேச்சை அனைத்து வீரர்களும் கேட்டாக வேண்டும். அப்படி கேட்கவில்லை என்றால் அணியிலிருந்து அவர்களை தூக்கி எறிந்து விட்டு உங்களது திட்டங்களுக்கு ஏற்ப வீரர்களை தேர்வு செய்து விளையாட வைக்க வேண்டும் என்று பாண்டிங் காட்டமாக பேசியுள்ளது கிரிக்கெட் உலகில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.