மிகப் பெரிய அளவில் ‘பொன்னியின் செல்வன்’ வெப் தொடர் - MGRரின் கனவை நனவாக்கும் பிரபல ஹீரோயின் மகன்

web series Ponniyin selvan announced MGR birthday
By Nandhini Jan 17, 2022 09:52 AM GMT
Report

எம்.ஜி.ஆரின் கனவுத் திரைப்படமான பொன்னியின் செல்வன், அஜய் பிரதீப் இயக்கத்தில் மிகப்பெரிய அளவில் திரைப்படமாகவும் வெப் தொடராகவும் உருவாக இருக்கிறது.

‘ஜெனோவா’ படத்தில் எம்.ஜி.ஆருக்கு ஜோடியாக நடித்த ஓமனாவின் மகன் தான் அஜய் பிரதீப். இவர் தந்தையான கிருஷ்ணன் தமிழகத்தின் தலை சிறந்த புகைப்படக் கலைஞர்களின் ஒருவர்.

இவர் திரைப்படக் கல்லூரியில் படித்தவர். பழம்பெரும் ஒளிப்பதிவாளரான கே.எஸ். பிரசாத்தின் உதவியாளராக பணிபுரிந்துள்ள அஜய் பிரதீப், எண்ணற்ற விளம்பர படங்கள் மற்றும் அரசு மற்றும் இதர ஆவணப்படங்களை இயக்கி இருக்கிறார். ஸ்ரீநிதி அஜய் தயாரிக்கும் இப்படத்தை எட்டர்னிட்டி ஸ்டார் மற்றும் எட்டர்னிட்டி மோஷன் கிராஃப்ட் ஹப் பிரைவேட் லிமிடெட் நிறுவனங்கள் வழங்குகின்றன.

பல மொழிகளை சேர்ந்த முன்னணி நடிகர்கள் முக்கிய வேடங்களில் இப்படத்தில் நடிக்க இருக்கிறார்கள். இப்படம் அகில இந்திய படம் 5 மொழிகளில் வெளியாக இருக்கிறது. வெப்சீரிஸ் 12 சீசன்களில் 153 எபிசோட்களைக் கொண்டிருக்கும் என்று இயக்குநர் கூறினார். அதை தவிர 2 வருடங்களில் 3 பாகங்களாக இப்படம் வெளியாக இருக்கிறது. வெளிநாட்டு மொழிகளிலும் டப் செய்யப்பட இருக்கிறது.

படத்திற்கு இசைஞானி இளையராஜா இசையமைக்க உள்ளார். சாபு சிரில் கலை இயக்கம் மற்றும் தயாரிப்பு வடிவமைப்பை மேற்கொள்கிறார். படத்தொகுப்பு பணிகளை ஆண்டனி செய்ய உள்ளார். பாகுபலி புகழ் விஸ்வநாத் சுந்தரம் மற்றும் சண்முகவேல் ஆகியோர் ஓவிய சித்திரங்களை வடிவமைக்கின்றனர்.

இது குறித்து அஜய் பிரதீப் கூறுகையில் -

எம்.ஜி.ஆரின் பிறந்தநாளான இன்று இப்படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடுவதில் பெருமை கொள்கிறோம். எம்.ஜி.ஆருக்கு சமர்ப்பணம் செய்யும் விதமாக, 3 போஸ்டர்களும் வெளியிடப்படுகின்றன.

எம்.ஜி.ஆர் நடிக்க விரும்பிய லட்சிய கதாபாத்திரங்களான அருள்மொழிவர்மன் மற்றும் வந்தியத்தேவன் வேடங்களில் இந்த போஸ்டர்களில் அவர் இடம் பெற்றுள்ளார். தமிழ் சினிமாவின் தன்னிகரற்ற எழுத்தாளரான டாக்டர் கலைஞர் கருணாநிதி அவர்களுக்கும் இந்த பிரமாண்ட படைப்பு அர்ப்பணிக்கப்படுகிறது என்றார்.

இப்படத்தைப் பற்றிய கூடுதல் அறிவிப்புகள் மற்றும் விவரங்கள் விரைவில் வெளியாக உள்ளது. 

மிகப் பெரிய அளவில் ‘பொன்னியின் செல்வன்’ வெப் தொடர் - MGRரின் கனவை நனவாக்கும் பிரபல ஹீரோயின் மகன் | Ponniyin Selvan Mgr Birthday Announced Web Series