அமைச்சர் பொன்முடி வழக்கு - சென்னை உயர்நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு..!!
சொத்துகுவிப்பு வழக்கில் உயர்கல்வி துறை அமைச்சர் பொன்முடி மற்றும் அவரது மனைவிக்கு இன்று சென்னை உயர்நீதிமன்றம் தண்டனையை வழங்கியுள்ளது.
வழக்கின் பின்னணி
கடந்த 1996-2001-ஆம் ஆண்டு வரையிலான திமுக ஆட்சியில் போக்குவரத்துத்துறை அமைச்சராக பணியாற்றி வந்தார் தற்போதைய உயர்கல்வி துறை அமைச்சர் பொன்முடி. அப்போது வருமானத்துக்கு அதிகமாக அதாவது சுமார் 1.36 கோடி ரூபாய் அளவுவிற்கு சொத்து குவிப்பில் ஈடுபட்டதாக அவர் மீதும், அவருடைய மனைவி விசாலாட்சி மற்றும் அவரின் குடும்பத்தினர் மீதும் லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
அந்த வழக்கின் விசாரணையில் இருந்து வேலூர் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் பொன்முடி மற்றும் அந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்டிருந்த அவரின் குடும்பத்தினரை விடுதலை செய்து கடந்த ஜூன் மாதம் தீர்ப்பளித்தது.
இந்த தீர்ப்பை தாமாக முன்வந்து விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், இதுதொடர்பாக பொன்முடி மற்றும் லஞ்ச ஒழிப்புத்துறை பதிலளிக்க உத்தரவிட்டிருந்தார்.
இதற்கு எதிராக வழக்கின் விசாரணையை ரத்து செய்யக்கோரியும், இடைக்காலத் தடை கோரியும் அமைச்சர் பொன்முடி மற்றும் அவரது மனைவி விசாலாட்சி தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.
தள்ளுபடி
இந்த வழக்கை விசாரித்த மாவட்ட நீதிபதி சார்பிலும் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இந்த மனுக்கள் இன்று விசாரணைக்கு உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் அமர்வில் வந்தது. வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி, "ஆனந்த் வெங்கடேஷ் போன்ற நீதிபதிகள் நீதித்துறையில் இருப்பதற்கு நன்றி எனக் கூறி, அமைச்சருக்கு எதிரான சொத்துக்குவிப்பு வழக்கை நீதிபதி தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்தது சரிதான் என்று சுட்டிக்காட்டினார்.
இதில், மனுதாரருக்கு ஏதேனும் குறைகள் இருப்பின், இந்த வழக்கு தனி நீதிபதி முன்பு விசாரணைக்கு வரும்போது, அதை தெரிவித்துக் கொள்ளலாம் என்று தெரிவித்த நீதிபதி, அமைச்சர் பொன்முடி மற்றும் அவரது மனைவி தரப்பில் தாக்கல் செய்யப்பட்டிருந்த மேல்முறையீட்டு மனுக்களை அதிரடியாக தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.
இந்த வழக்கின் விசாரணை சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் அமர்வில் இருந்து உயர் நீதிமன்ற மதுரை கிளைக்கு மாற்றப்பட்டு, அவருக்குப் பதிலாக நீதிபதி எம்.ஜெயச்சந்திரன் இந்த வழக்கை விசாரித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
விடுதலை ரத்து
இந்த வழக்கில் கடந்த 19-ஆம் தேதி சென்னை உயர்நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பை வழங்கியது.தீர்ப்பை அளித்த நீதிபதி ஜெயச்சந்திரன், அமைச்சர் பொன்முடி வருமானத்திற்கு அதிகமாக 64.90% சொத்துக்களை சேர்த்துள்ளார் என்றும் அவருக்கு கீழமை நீதிமன்றம் அளித்திருந்த விடுதலையை ரத்து செய்து உத்தரவிட்டுள்ளார்.
குற்றவாளி என்ற ஒரு மக்கள் பிரதிநிதிக்கு தீர்ப்பு வழங்கப்பட்டாலே அவர் தனது பதவியை இழப்பார், அதற்கு தடை பெற்றால் மட்டுமே அவரால் சட்டமன்ற உறுப்பினராக தொடரமுடியும். அதே போல, 3 ஆண்டுகளுக்கு மேல் தண்டனை உறுதிப்படுத்தப்பட்டால், ஜாமீன் பெற அமைச்சர் பொன்முடி உச்சநீதிமன்றமே செல்லவேண்டும்.
தண்டனை
மேலும், இந்த வழக்கில் அமைச்சர் பொன்முடிக்கு வழங்கப்படவுள்ள தண்டனை இன்று அறிவிக்கப்படும் என தள்ளிவைக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது அவருக்கான தண்டனை வழங்கப்பட்டுள்ளது.
கோர்ட்டில் இன்று உயர்கல்வி துறை அமைச்சர் பொன்முடி மற்றும் அவரது மனைவி விசாலாட்சி நேரில் ஆஜராகினர்.
வழங்கப்பட்டுள்ள தீர்ப்பில், அமைச்சர் பொன்முடிக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டைனையும், இருவருக்கும் தலா 50 லட்ச ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்ட நிலையில், அமைச்சர் பொன்முடிக்கு வழங்கப்பட்ட தண்டனையை 6 மாதங்கள் நிறுத்திவைத்தும், மேல்முறையீடு செய்ய 30 நாட்கள் அவகாசமும் வழங்கியுள்ளது.