இன்று முதல் பொங்கல் சிறப்பு பேருந்துகள் இயக்கம் - உங்கள் ஊருக்கு செல்ல எங்கே செல்ல வேண்டும்?

tngovt pongalspecialbus பொங்கல் சிறப்பு பேருந்துகள்
By Petchi Avudaiappan Jan 11, 2022 12:15 AM GMT
Petchi Avudaiappan

Petchi Avudaiappan

in தமிழ்நாடு
Report

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சொந்த ஊர்களுக்கு செல்வோருக்கு வசதியாக தமிழக அரசு சார்பில் இன்று முதல் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படவுள்ளன. 

பொங்கல் பண்டிகை ஜனவரி 14 ஆம் தேதி கொண்டாடப்பட உள்ளது. தொடர்ந்து மாட்டுப்பொங்கல், காணும் பொங்கல் என ஜனவரி 15,16 ஆகிய தேதிகளும் விடுமுறை என்பதால் வெளியூரில் வேலை பார்த்து வரும் மக்கள் தங்கள்  சொந்த ஊர்களுக்கு செல்வது வழக்கம். 

அவர்களின் வசதிக்கேற்ப தமிழக அரசு சார்பில் இன்று முதல் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படவுள்ளன. இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், பொங்கல் திருநாளை முன்னிட்டு போக்குவரத்துத் துறையின் சார்பில் மேற்கொள்ளப்படும் சிறப்பு ஏற்பாடுகள் மற்றும் சிறப்பு பேருந்துகள் இயக்கம் குறித்து கடந்த 20.12.2021 அன்று போக்குவரத்துத்துறை அமைச்சர் ஆர்.எஸ்.ராஜகண்ணப்பன் தலைமையில் பல்வேறு துறை அலுவலர்களுடன் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

அதன்படி பொங்கல் பண்டிகையை முன்னிட்டு நாளை முதல் 13-ம் தேதி வரை 16,768 பேருந்துகள் இயக்கப்படவுள்ளன.கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி கோயம்பேடு, பூந்தமல்லி, மாதவரம், கே.கே.நகர், தாம்பரம், தாம்பரம் ரயில் நிலைய பேருந்து நிலையங்களில் இருந்து பேருந்துகள் இயக்கப்படும். சென்னையிலிருந்து 2,100 பேருந்துகளுடன், 4000 சிறப்பு பேருந்துகள் என 3 நாட்களுக்கும் சேர்த்து 10,300 பேருந்துகள் இயக்கப்படும்.

இதற்காக கோயம்பேடு, தாம்பரம் என மொத்தம் 11 முன்பதிவு மையங்கள் செயல்படவுள்ளது. மேலும் பேருந்துகளின் இயக்கம் குறித்து அறிந்து கொள்ள மற்றும் புகார் தெரிவிக்க 94450 14450, 94450 14436 ஆகிய எண்களில் பொதுமக்கள் தொடர்பு கொள்ளலாம். அதேபோல் ஆம்னி பேருந்துகளில் அதிக கட்டணம் வசூல் செய்தால் 1800 425 6151, 044-2474 9002 என்ற கட்டணமில்லா எண்களில் புகார் அளிக்கலாம். 

  • மாதவரம் புதிய பேருந்து நிலையத்தில் இருந்து  செங்குன்றம் வழியாக பொன்னேரி, கும்மிடிபூண்டி மற்றும் ஊத்துக்கோட்டை செல்லும் பேருந்துகள் மற்றும் ஆந்திர மாநிலம் செல்லும் பேருந்துகள் இயக்கம்
  •  கே.கே. நகர் மா.போ.க. பேருந்து நிலையத்தில் இருந்து கிழக்கு கடற்கரை சாலை(இசிஆர்) வழியாக புதுச்சேரி, கடலூர் மற்றும் சிதம்பரம் செல்லும் பேருந்துகள் இயக்கம்
  • தாம்பரம் ரயில் நிலைய பேருந்து நிறுத்தத்தில் இருந்து திண்டிவனம் மார்க்கமாக திருவண்ணாமலை செல்லும் பேருந்துகள் மற்றும் போளூர், சேத்துபட்டு, வந்தவாசி, செஞ்சி மார்க்கமாக செல்லும் பேருந்துகள் மற்றும் திண்டிவனம் வழியாக பண்ருட்டி, நெய்வேலி, வடலூர், சிதம்பரம், காட்டுமன்னார்கோயில் மற்றும் திண்டிவனம் வழியாக புதுச்சேரி, கடலூர், சிதம்பரம் செல்லும் பேருந்துகள் இயக்கம்
  • பூந்தமல்லி பேருந்து நிலையத்தில் இருந்து வேலூர், ஆரணி, ஆற்காடு, திருப்பத்தூர், காஞ்சிபுரம், செய்யாறு, ஓசூர், தருமபுரி, கிருஷ்ணகிரி, திருத்தணி செல்லும் பேருந்துகள் இயக்கம்
  • கோயம்பேடு  புரட்சித்தலைவர் டாக்டர் எம்.ஜி.ஆர். பேருந்து நிலையத்தில் இருந்து மேற்குறிப்பிட்டுள்ள ஊர்களைத் தவிர  இதர ஊர்களுக்கு செல்லும் பேருந்துகள் (மயிலாடுதுறை, நாகப்பட்டினம், வேளாங்கண்ணி, திருச்சி, மதுரை, திருநெல்வேலி, செங்கோட்டை, தூத்துக்குடி, திருச்செந்தூர், நாகர்கோவில், கன்னியாகுமரி, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, காரைக்குடி, புதுக்கோட்டை, திண்டுக்கல், விருதுநகர், திருப்பூர், ஈரோடு, இராமநாதபுரம், சேலம், கோயம்புத்தூர், எர்ணாகுளம், திருவனந்தபுரம் மற்றும் பெங்களூரு) ஆகிய ஊர்களுக்கு பேருந்துகள் இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.