இன்று முதல் பொங்கல் பரிசுத்தொகை ரூ 1000 - முதலமைச்சர் தொடங்கி வைக்கிறார்

Thai Pongal M K Stalin Government of Tamil Nadu
By Thahir Jan 09, 2023 02:37 AM GMT
Report

இன்று குடும்ப அட்டைத்தாரர்களுக்கு ரூ.1000 ஆயிரம் பொங்கல் பரிசுத்தொகை வழங்கும் திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார்.

பொங்கல் பரிசுத்தொகை 

தமிழர் திருநாளாம் தைப்பொங்கல் பண்டிகையை மக்கள் சிறப்பாக கொண்டாடும் வகையில் தமிழ்நாட்டில் உள்ள 2.19 கோடி ரேசன் அட்டைதாரர்களுக்கு 1 கிலோ பச்சரிசி, 1 கிலோ சர்க்கரை மற்றும் ரூ.1000 ரொக்கத்துடன் முழுக் கரும்பு பொங்கல் பரிசாக வழங்கப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஏற்கனவே அறிவித்திருந்தார். இதற்காக அரசு ரூ.2,429 கோடி ஒதுக்கியுள்ளது.

Pongal prize money from today is Rs 1000

இதையொட்டி தமிழ்நாடு முழுவதும் உள்ள 33 ஆயிரம் ரேசன் கடைகளில் பொங்கல் பரிசுத்தொகுப்பு வினியோகம் செய்வதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது.

உணவு மற்றும் கூட்டுறவுத்துறை சார்பில் இதற்கான வழிகாட்டுதல்கள் ரேசன் கடைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

ரேசன் கடைகளில் கூட்ட நெரிசலை தவிர்க்க ஒவ்வொரு தெருக்கள் வாரியாக எப்போது வந்து மக்கள் பொங்கல் பரிசை வாங்க வரவேண்டும் என்று டோக்கன் வழங்கப்பட்டுள்ளது.

டோக்கன் இல்லாதவர்கள் 13-ம் தேதி சென்று பொங்கல் பரிசு தொகுப்பை வாங்கிக் கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த பரிசுத்தொகுப்பு இலங்கை தமிழர் மறுவாழ்வு மையங்களில் வசிக்கக் கூடிய குடும்பங்களுக்கும் கிடைக்கும் என்று அரசு அறிவித்துள்ளது.

முதலமைச்சர் இன்று தொடங்கி வைக்கிறார்

இந்நிலையில், பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கும் திட்டம் தமிழ்நாடு முழுவதும் இன்று தொடங்கப்படுகிறது. சென்னையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று காலை 9 மணிக்கு கோட்டைக்கு செல்லும் வழியில் போர் நினைவுச் சின்னம் எதிரே உள்ள அன்னை சத்யா நகரில் உள்ள ரேசன் கடைக்கு சென்று இந்த திட்டத்தை தொடங்கி வைக்கிறார்.

அந்த கடையில் உள்ள பொதுமக்கள் 20 பேருக்கு 1 கிலோ பச்சரிசி, 1 கிலோ சர்க்கரை, ரூ.1000 பணத்துடன் ஒரு முழு கரும்பு ஆகியவற்றையும் தனது கையால் வழங்குகிறார்.

இதைத்தொடர்ந்து ஒவ்வொரு மாவட்டங்களிலும் காலை 10 மணி முதல் ரேசன் அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்படுகிறது.

இதேபோல் அமைச்சர்கள், பாராளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், மாவட்ட ஊராட்சி தலைவர்கள், கவுன்சிலர்கள் பொதுமக்களுக்கு பொங்கல் பரிசுத்தொகுப்புகளை வழங்க உள்ளனர்.