தமிழக அரசின் பொங்கல் பரிசுத் தொகுப்பு - வெளியான முக்கிய அறிவிப்பு
தமிழக அரசின் பொங்கல் பரிசுத் தொகுப்பு குறித்து முக்கிய அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது.
தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகைக்கு ரேஷன் அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு 21 பொருள்கள் அடங்கிய தொகுப்பு வழங்கப்படும் என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் ஏற்கனவே அறிவித்து இருந்தார்.கடந்த ஜனவரி 4 ஆம் தேதி இந்த திட்டத்தை முதல்வர் தொடங்கி வைத்தார்.
அதன்படி மொத்தம் 1,088 கோடி ரூபாய் செலவில் பச்சரிசி, வெல்லம், முந்திரி, திராட்சை, ஏலக்காய், பாசிப்பருப்பு, நெய், மஞ்சள் தூள், மிளகாய் தூள், கடுகு, சீரகம், மல்லி தூள், மிளகு, புளி, கோதுமை மாவு, ரவை, உப்பு, மிளகு, உளுத்தம் பருப்பு, கடலைப் பருப்பு மற்றும் கரும்பு ஆகிய 21 பொருட்கள் பொதுமக்கள் வழங்கப்பட்டு வருகிறது.
தமிழகம் முழுவதும் ரேஷன் கடைகளில் பொங்கல் பரிசு சிறப்பு தொகுப்பு பொருட்கள் முழுவீச்சில் வழங்கப்பட்டு வரும் நிலையில் தற்போது கொரோனா அதிவேகமாக பரவி வருவதால் கூட்ட நெரிசலை தவிர்க்கும் வகையிலேயே டோக்கன் முறையில் பொங்கல் பரிசு தொகுப்பு விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் ரேஷன் கடைகளில் ஜனவரி 31-ம் தேதி வரை பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. கொரோனா பரவல் காரணமாக ஞாயிற்றுக்கிழமைதோறும் முழு ஊரடங்கு போடப்பட்டுள்ளதால் மக்கள் தங்களுக்கு தெரிவிக்கப்படும் வேறு நாளில் பொங்கல் பரிசை பெற்றுக் கொள்ளலாம் என்று தமிழக உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி தெரிவித்துள்ளார்.