பொங்கல் பண்டிகை - முதல்வர் மு.க. ஸ்டாலின் உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் வாழ்த்து!
தமிழக அரசியல் கட்சி தலைவர்கள் தமிழ் மக்களுக்கு பொங்கல் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
பொங்கல் பண்டிகை
பொங்கல் என்பது தமிழர்களால் சிறப்பாகக் கொண்டாடப்படும் ஓர் அறுவடைப் பண்டிகையாகும். தமிழர் வாழும் அனைத்து நாடுகளிலும் பொங்கல் பண்டிகை வெகு விமர்சையாக கொண்டாடப்படுகிறது.
உழைக்கும் மக்கள் இயற்கைத் தெய்வமாகக் கருதப்படும் சூரியனுக்கும், மற்ற உயிர்களுக்கும் சொல்லும் ஒரு நன்றியறிதலாகக் கொண்டாடப்படுகிறது. இந்து கடவுளான சூரிய தேவனுக்கும் இயற்கைக்கும் அர்ப்பணிக்கப்பட்டது.ஆடி மாதத்தில் தேடி விதைத்த பயிர்களின் விளைச்சலை அறுவடை செய்து பயன் அடையும் பருவமே தை மாதம் ஆகும்.
அந்த அறுவடையில் கிடைத்த நெல்லின் புத்தரிசியைச் சர்க்கரை, பால், நெய் சேர்த்துப் புதுப் பானையிலிட்டுப் புத்தடுப்பில் கொதிக்க வைத்துப் பொங்கல் சோறாக்கி சூரியனுக்கும் மாட்டுக்கும் படைத்து உண்டு மகிழும் விழாவே பொங்கல் விழாவாகும். இந்நிலையில் தமிழக அரசியல் கட்சி தலைவர்கள் தமிழ் மக்களுக்கு பொங்கல் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
முதல்வர் மு.க. ஸ்டாலின்: தமிழ்நாடெங்கும் பொங்கும் இன்பப் பொங்கல் - ஈகைப் பொங்கல் - சமத்துவப்பொங்கல், இந்த ஆண்டு இந்தியா முழுவதும் பொங்கட்டும் அனைவருக்கும் தமிழர் திருநாளாம் பொங்கல் நல்வாழ்த்துகள்! பொங்கலோ பொங்கல்!
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை : உயிர்கள் அனைத்திற்கும் உணவளிக்கும் உழவர் பெருமக்களின் திருநாளாம் தைப்பொங்கல் தினத்தன்று, தமிழக மக்கள் அனைவருக்கும் தமிழக பாஜக சார்பாக மனமார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். இன்பொங்கலும், செங்கரும்பும், காய்கனிகளும் படைத்து, காரிருள் அகற்றும் கதிரவனை வணங்கி நன்றி சொல்லி இந்நன்னாளைக் கொண்டாடுவோம். அனைவர் இல்லங்களிலும், நலமும், வளமும், மகிழ்ச்சியும் பொங்கட்டும். பொங்கலோ பொங்கல்!
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி : உலகமெங்கும் வாழுகின்ற தமிழர்கள் அனைவரும் அன்பு பொங்க, இன்பம் பொங்க, இனிமை பொங்க மகிழ்ச்சியுடன் கொண்டாடி மகிழும் தைத் திருநாளாம் பொங்கல் திருநாளில், எனதருமைத் தமிழ் மக்கள் அனைவருக்கும் உளமார்ந்த பொங்கல் திருநாள் நல்வாழ்த்துகளை மகிழ்ச்சியோடு தெரிவித்துக்கொள்கிறேன். தமிழர் திருநாளாம் பொங்கல் திருநாளில் மக்கள் அனைவரும் உடல் நலத்தையும், மகிழ்ச்சியையும், என்றும் குறையாத அன்பையும் பெற்று வளமோடும், நலமோடும் இன்புற்று வாழ வேண்டும் என்று எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறேன். பொங்கல் நல்வாழ்த்துக்கள்!
நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் : உலகமெங்கும் பரவி வாழும் என் உயிருக்கினிய தமிழ் மக்கள் அனைவருக்கும் தமிழ்த்தேசிய திருநாளாம் பொங்கல் விழா மற்றும் தமிழ்ப்புத்தாண்டு நல்வாழ்த்துகள்! தை மகளே வருக..! தமிழர் நலம் பெருக.!!
மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல் ஹாசன் : இயற்கையை வாழ்த்தும் நாள், உழைப்பில் உதவும் சக உயிர்களுக்கு நன்றி சொல்லும் நாள், விதைத்த பொருளின் விளைச்சலைப் பார்த்து விம்மிதம் கொள்ளும் நாள், சாதி மத பேதமின்றி தமிழர் கூடிக்கொண்டாடும் நாள் என மகிழ்வுகளை அள்ளிவரும் தைப்பொங்கல் நாளில் உங்களை வாழ்த்துவதில் மகிழ்ச்சி அடைகிறேன்.