விருதுநகரில் வாக்குப்பதிவு நிறுத்தம் - எந்த பட்டனை அழுத்தினாலும் பாஜகவுக்கு விழும் ஓட்டு- மக்கள் அதிர்ச்சி
தமிழகம் முழுவதும் 234 தொகுதிகளில் இன்று ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற்று வருகிறது. கொரோனா பாதுகாப்பு நடைமுறைகளுடன் காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு நடைபெற தொடங்கியது. கடந்த தேர்தலை விட வாக்குப்பதிவு குறைந்துள்ளதாக தேர்தல் ஆணையம் தரப்பில் தகவல் அளிக்கப்பட்டுள்ளது.
இது ஒருபுறமிருக்க மின்னனு வாக்குப்பதிவு இயந்திரங்களில் கோளாறுகள் புது பிரச்சினையாக கிளம்பியுள்ளன. விருதுநகர் மாவட்டம் சத்திரிய பள்ளி வாக்குச்சாவடியில் எந்தச் சின்னத்தில் வாக்களித்தாலும் பாஜக சின்னம் பதிவாவதாக வாக்காளர்கள் புகார் தெரிவித்துள்ளனர். இதனையடுத்து, வாக்காளர்கள் புகாரை தொடர்ந்து வாக்குப்பதிவு நிறுத்தப்பட்டுள்ளது. மின்னணு இயந்திரத்தை அதிகாரிகள் சோதனை செய்து வருகிறார்கள்.

முன்னதாக அமைச்சர் ஜெயக்குமார் போட்டியிடும் ராயபுரத்தில் வாக்குப்பதிவு தொடங்குவதற்கு முன்பே 52 வாக்குகள் பதிவாகியிருப்பதாக புகார் எழுந்தது. அதனையடுத்து, அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் போட்டியிடும் ஆவடியிலுள்ள ஒரு வாக்குச்சாவடியில் திமுகவுக்கு வாக்களிக்க விவிபேட் இயந்திரத்தில் அதிமுக ஸ்லிப் வந்துள்ளது.
சபாநாயகர் தனபால் போட்டியிடும் அவிநாசியில் திமுகவுக்கு வாக்களிக்க அதிமுக சின்னத்தில் லைட் எரிந்துள்ளது. பிரச்சினைக்குரிய அந்தந்த வாக்குச்சாவடிகளில் வாக்குப்பதிவு நிறுத்திவைக்கப்பட்டுள்ளன.