பிரபல கிரிக்கெட் வீரர்கள் டிகாக் - பொல்லார்ட் மோதல் : அதிர்ச்சியில் ரசிகர்கள்

quintondekock kieronpollard
By Petchi Avudaiappan Oct 27, 2021 07:24 PM GMT
Petchi Avudaiappan

Petchi Avudaiappan

in கிரிக்கெட்
Report

நிறவெறிக்கு எதிராக மைதானத்தில் மண்டியிட மறுத்த தென்னாப்பிரிக்கா வீரர் குயின்ட்டன் டி காக் செயலுக்கு வெஸ்ட் இண்டீஸ் கேப்டன் பொல்லார்ட் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். 

கடந்தாண்டு அமெரிக்காவில் ஆப்பிரிக்க-அமெரிக்கர் ஜார்ஜ் ஃப்ளாய்ட் கொல்லப்பட்ட சம்பவம் உலகமெங்கும் அதிர்வலையை ஏற்படுத்தியது.  அந்தச் சம்பவம் நடைபெற்றதிலிருந்தே, அரசியல் தலைவர்கள், நடிகர்கள், விளையாட்டு வீரர்கள் எனப் பலரும் தொடர்ந்து தங்களால் இயன்ற வகையில் நிறவெறிக்கு எதிராகத் தங்கள் குரல்களை பலமாகவே பதிவு செய்துவருகின்றனர். டி20 உலகக்கோப்பையிலும் அது எதிரொலித்து வருகிறது. 

அனைத்து அணி வீரர்களும் முட்டி போட்டு இனவெறிக்கு எதிரான பிரசாரத்தில் ஈடுபட்டு வேண்டும் என ஐசிசி கோரிக்கை விடுத்திருந்தது. அதன்படி போட்டி தொடங்கும் முன் அனைத்து வீரர்களும் களத்தில் முட்டி போட்டு இனவெறிக்கு எதிராக எதிர்ப்பை பதிவு செய்து வருகின்றனர். இந்திய வீரர்களும் பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் இப்படி தங்கள் எதிர்ப்பை பதிவு செய்திருந்தனர். 

ஆஸ்திரேலியா மற்றும் தென்னாப்பிரிக்க அணிகளுக்கு இடையே கடந்த 23ஆம் தேதி நடைபெற்ற போட்டியில் சில தென் ஆப்பிரிக்க வீரர்கள் முட்டி போட மறுத்துவிட்டனர். இதையடுத்து அனைத்து வீரர்களும் Black Lives Matter இயக்கத்திற்கு ஆதரவாக முட்டி போட வேண்டும் என தென்னாப்பிரிக்க கிரிக்கெட் வாரியம் நேற்று உத்தரவிட்டிருந்தது. இதற்கு மறுத்ததால் தென்னாப்பிரிக்காவின் தொடக்க வீரரும் விக்கெட் கீப்பருமான டி காக், அணியில் இருந்து நீக்கப்பட்டார். 

டி காக்கின் இந்த செயலுக்கு கிரிக்கெட் வீரர்கள் தொடங்கி பலரும் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், வெஸ்ட் இண்டீஸ் கேப்டன் பொல்லார்ட் டி காக்கின் இந்த செயலை கடுமையாக விமர்சித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறுகையில், இந்த விஷயத்தில் எங்கள் நிலைப்பாட்டை அனைவரும் அறிவீர்கள். அணியாக, மக்களாக எங்கள் நிலைப்பாடு (நிறவெறிக்கு எதிராகக் குரல் கொடுப்பது) இது தான். அதை நாங்கள் தொடர்ந்து செய்வோம். 

எந்த ஒரு வீரரும் இப்படி black lifes matter பிரச்சாரத்தை எதிர்ப்பார் என்று நான் நினைக்கவில்லை. அப்படி ஒரு விஷயத்தை நான் கேள்விப்பட்டதே இல்லை. முதல்முறை இப்படிக் கேள்விப்படுகிறேன். யாரும் இதனை எங்கள் மீது பரிதாபப்பட்டோ அல்லது வருத்தம் தெரிவிக்கும் வகையிலேயோ செய்யத் தேவையில்லை. இந்த பிரச்சினையைப் புரிந்துகொள்ளும் அனைவரும் இதற்குக் கண்டிப்பாக ஆதரவு தருவார்கள் என தான் நம்புவதாக பொல்லார்ட் தெரிவித்துள்ளார்.