”அடிக்காதீங்க அண்ணா” நாட்டையே உலுக்கிய பொள்ளாச்சி கொடூரம் - 9 பேருக்கு சாகும்வரை சிறை
கூட்டு பாலியல் வன்கொடுமை
கோவை, பொள்ளாச்சியில், கல்லுாரி மாணவிகள் மற்றும் பெண்களை கடத்தி சென்று கூட்டு பாலியல் வன்கொடுமை செய்து, ஆபாச வீடியோ எடுத்து துன்புறுத்திய சம்பவம், கடந்த 2019ல் நடந்தது.
இது தொடர்பான வீடியோ காட்சிகள் வெளியாகி, நாட்டையே உலுக்கியது. அதில் என்னை அடிக்காதீர்கள் அண்ணா.... என, பாலியல் துன்புறுத்தல் செய்தவர்களிடம் இளம்பெண் ஒருவர் கெஞ்சிய ஆடியோ வெளியாகி பதைபதைக்கச் செய்தது.
தொடர்ந்து சிபிஐ விசாரணை நடத்திய இந்த வழக்கில், சபரிராஜன்,32, திருநாவுக்கரசு,34, சதீஷ்,32, வசந்தகுமார்,30, மணிவண்ணன்,32, பாபு,33, ஹெரன் பால்,32, அருளானந்தம்,38, மற்றும் அருண்குமார்,32, ஆகிய 9 பேர் கைது செய்யப்பட்டனர். இந்த வழக்கு, சென்னை உயர்நீதிமன்றத்தின் கண்காணிப்பில், கோவை மகளிர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.
சாகும்வரை ஆயுள்
பாதிக்கப்பட்ட 8 பெண்கள் தொடர்பான தகவல்கள் வெளியாகாமல் இருக்க மூடப்பட்ட அறையில் நீதிமன்ற விசாரணை நடைபெற்றது. குற்றம்சாட்டப்படவர்கள் மற்றும் 48 சாட்சிகளிடம் நடத்திய விசாரணையின் அடிப்படையில், ஆயிரத்து 500 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகையை சிபிஐ தரப்பு நீதிமன்றத்தில் தாக்கல் செய்தது.
அதில், சபரி ராஜன் மற்றும் திருநாவுக்கரசு ஆகியோரிடம் இருந்து கைப்பற்றப்பட்ட செல்போன்களும், லேப்டாப்களும் முக்கிய ஆதாரங்களாக இருந்ததாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்ட 9 பேருக்கும் பிணை வழங்காததால், 2019-ஆம் ஆண்டு முதல் சிறையில் உள்ளனர்.
இந்நிலையில் குற்றவாளிகள் 9 பேருக்கும் சாகும் வரை ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.