நாடு சுதந்திரமடைந்த பிறகும், சமூக விரோதிகளின் கையில் பெண்களின் பாதுகாப்பு சிக்கியுள்ளது: நீதிபதி வேதனை
நாடு சுதந்திரமடைந்து இத்தனை ஆண்டுகள் ஆகியும் பகலில் கூட பெண்கள் அச்சமின்றி வெளியே செல்ல முடியாத நிலை இருப்பது வேதனையாக உள்ளது என சென்னை உயர்நீதிமன்றம் நீதிபதி வேதனையுடன் கூறியுள்ளார்.
இரவு நேரங்களில் எப்பொழுது பெண்கள் தைரியமாக நடமாட முடிகிறதோ அப்பொழுதுதான் உண்மையான சுதந்திரம் கிடைத்ததாக கருதமுடியும் என்ற மகாத்மா காந்தியின் கருத்தையும் நீதிபதி தெரிவித்துள்ளார்.
கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் கல்லூரி மாணவிகள், ஆசிரியைகள் உள்ளிட்ட பலரை பாலியல் கொடுமை செய்து, அதனை விடியோ படம் எடுத்த கும்பல் மிரட்டி பணம் பறித்த சம்பவம் கடந்த 2019ஆம் ஆண்டு தமிழகம் மட்டுமல்லாது நாடு முழுவதும் அதிர்வலைகள் எழுப்பியது.
பாதிக்கப்பட்ட கல்லூரி மாணவியின் சகோதரர் ஒருவர் கொடுத்த புகாரின் அடிப்படையில் தமிழ்நாடு காவல்துறை வழக்குப்பதிவு செய்து பதிவு செய்தது. பாலியல் கொடுமை வழக்கில், திருநாவுக்கரசு, ரிஷ்வந்த் என்கிற சபரிராஜன், வசந்தகுமார், சதீஷ், மணிவண்ணன் ஆகிய ஐந்து பேர் ஏற்கெனவே கைதுசெய்யப்பட்டனர்.
இந்த வழக்கானது சிபிஐ விசாரணைக்கு மாற்றப்பட்ட நிலையில், பொள்ளாச்சி அதிமுக நகர மாணவரணிச் செயலாளர் அருளானந்தம், ஹேரேன் பால், பாபு என்கிற பைக் பாபு ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.
வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட அருளானந்தம் ஜாமீன் கேட்டு கோவை மகளிர் நீதிமன்றத்தில் கடந்த சில மாதங்களுக்க முன்பு மனுத்தாக்கல் செய்திருந்தார்.
அந்த மனு விசாரணைக்கு வந்த போது, "பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை தொடர்பாக மேலும் சில பெண்கள் புகார் அளித்துள்ளனர். எனவே, அருளானந்தத்துக்கு ஜாமீன் வழங்கினால் அவர் சாட்சியங்களை அழித்துவிடுவார்" என சி.பி.ஐ தரப்பில் வாதாடப்பட்டது.
இதைத் தொடர்ந்து, அருளானந்தத்தின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து கோவை மாவட்ட மகளிர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
இதனையடுத்து அருளானந்தம் ஜாமீன் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.
இந்த வழக்கு நீதிபதி எம்.தண்டபாணி முன்பு கடந்த முறை விசாரணைக்கு வந்தபோது, சிபிஐ தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், ஏற்கனவே இந்த வழக்கில் கோவை நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு விட்டதாகவும், ஆனால் சில விளக்கங்களை நீதிமன்றம் கேட்டு வருவதாகவும் தெரிவித்தார்.
சிபிஐயில் ஆட்கள் பற்றாக்குறையால், வழக்கு விசாரணை நடத்துவதில் தாமதம் ஏற்படுகிறது என்றும் குறிப்பிட்டார்.
வரி வசூலிக்காத அரசு ஊழியர்களுக்கு சம்பளம் வழங்க தாமதமானால் ஏற்றுக் கொள்வார்களா? என காட்டமாக கேள்வி எழுப்பினார்.
இந்த வழக்கின் விசாரணையை சிபிஐ விரைந்து முடிக்க தேவையான அனைத்து ஒத்துழைப்பையும் வழங்க தயாராக இருப்பதாகவும், குறிப்பாக எஸ்.பி. அந்தஸ்திலான அதிகாரியை நியமித்து உதவ தயாராக இருப்பதாகவும் தமிழ்நாடு அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில், இந்த வழக்கில் புதன்கிழமை தீர்ப்பளித்த நீதிபதி தண்டபாணி, குற்றம்சாட்டப்பட்ட அருளானந்தத்தின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.
பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை தொடர்பான வழக்கின் விசாரணையை 6 மாதத்தில் விசாரித்து முடிக்க கோவை மகளிர் நீதிமன்றத்திற்கு உத்தரவிட்டதோடு, சிபிஐயின் விசாரணைக்கு உதவும் வகையில் சிபிசிஐடி எஸ்.பி. முத்தரசியை நியமித்தும் உத்தரவிட்டார்.
பெண்களை இரையாக்கி தங்களை திருப்திபடுத்திக் கொள்ளும் இதுபோன்ற நபர்களை பார்க்கும்போது, ரத்தம் சிந்தி பெற்ற சுதந்திரம் வீணாகி விட்டதா என எண்ண தோன்றுகிறது என்று கூறிய நீதிபதி,
இதுபோன்ற வழக்குகளில் விரைவான மற்றும் நியாயமான தீர்வை நீதிமன்றத்தால் வழங்குவதன் மூலம், பாதுகாப்பான சூழலில் இருப்பதை பொதுமக்கள் மனதிலும், இரும்புக்கரம் கொண்டு அடக்கப்படுவோம் என்ற அச்சத்தை குற்றம்புரிவோர் மனதிலும் விதைக்க முடியும் எனவும் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.