“ரெய்டு நடத்துனா அதிமுகவுக்கு தான் நல்லது” - பொள்ளாச்சி ஜெயராமன்
உள்ளாட்சித் தேர்தலில் அதிமுகவை சோர்வடைய வைக்க வேண்டும் என்பதற்காகவே எஸ்.பி.வேலுமணி வீட்டில் லஞ்ச ஒழிப்பு சோதனையை நடந்து வருவதாகவும், திமுக மீதும் பொள்ளாச்சி ஜெயராமன் குற்றம் சாட்டியுள்ளார்.
கடந்த அதிமுக ஆட்சியில் உள்ளாட்சித்துறை அமைச்சராக இருந்த எஸ்.பி.வேலுமணி, கோவை மற்றும் சென்னை மாநகராட்சிக்கான ஒப்பந்த டெண்டர்களில் முறைகேடு செய்ததாக குற்றச்சாட்டுகள் எழுந்த நிலையில் இன்று அவருக்கு சொந்தமான 55 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.
இதனிடையே இது தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள அதிமுக சட்டமன்ற உறுப்பினர் பொள்ளாச்சி ஜெயராமன், அரசியல் பழிவாங்கும் நடவடிக்கையாக தான் எஸ். பி. வேலுமணி வீட்டில் மற்றும் அவருக்கு சொந்தமான 55 இடங்களில் சோதனை நடந்து வருகிறது.
உள்ளாட்சித் தேர்தலில் அதிமுகவை சோர்வடைய வைக்க வேண்டும் என்பதற்காகத்தான் திமுக இந்த நடவடிக்கை எடுத்து வருகிறது.அது ஒருபோதும் நடக்காது என்றும் தெரிவித்தார். மேலும் இந்த சோதனையால் அதிமுக கோவை மாவட்டத்தில் இன்னும் வலுவடையுமே தவிர அவர்கள் நினைத்தது எதிர்பார்ப்பது நடக்காது என்றும் அவர் கூறினார்.
இந்த சோதனையால் அனைத்து அதிமுக எம்.எல்.ஏ.க்களும் ஓரே நேரத்தில் சந்திக்க வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. பொதுவாக ஒப்பந்தங்களை நேரடியாக அமைச்சர் கொடுப்பதில்லை. அதிகாரிகளுக்குதான் தெரியும். லஞ்ச ஒழிப்பு துறையினரின் சோதனை மாலை வரை நடந்தால் கோவையில் லட்சக்கணக்கான தொண்டர்கள் கூடுவார்கள் எனவும் பொள்ளாச்சி ஜெயராமன் தெரிவித்துள்ளார்.