வீட்டுக்காவலில் பிரியங்கா காந்தி- திருமாவளவன் கடும் கண்டனம்
மத்திய அரசின் வேளாண் சட்டங்களுக்கு எதிராக உத்தரபிரதேசத்தில் தொடர் போராட்டங்கள் நடந்து வருகிறது. இந்நிலையில் லக்கிம்பூர் கேரி மாவட்டத்தை சேர்ந்த விவசாயிகளும் இந்த போராட்டத்தில் தங்களை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டார்கள்.
இந்நிலையில், மத்திய உள்துறை இணை அமைச்சர் அஜய் மிஸ்ரா லக்கிம்பூர் கேரி மாவட்டத்திற்கு நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்பதற்காக வருவதை அறிந்த விவசாயிகள் அவருக்கு எதிராக கருப்புக் கொடி காட்ட முயற்சி செய்தனர்.
10 கிராமங்களை சேர்ந்த ஆயிரக்கணக்கான விவசாயிகள் திகுனியாவில் திரண்டனர். அப்போது, பாஜகவினர் வாகன அணிவகுப்பில் வந்து விவசாயிகள் மீது பயங்கரமாக மோதினர். இதில் விவசாயிகள் மற்றும் பத்திரிகையாளர் உட்பட 8 பேர் உயிரிழந்தனர். இந்த விவகாரத்தில் மத்திய இணை அமைச்சர் அஜய் மிஸ்ராவின் மகன் ஆஷிஷ் மிஸ்ரா சம்பந்தப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது.
இதனால் உத்தர பிரதேசத்தில் வன்முறை வெடித்தது. லக்கிம்பூர் கேரி மாவட்டத்தில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு, இணையதள சேவைகளும் கொடுக்கப்பட்டிருக்கிறது. உ.பி., வன்முறையில் உயிரிழந்த விவசாயிகளை சந்திப்பதற்காக சென்ற காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி கைது செய்யப்பட்டு தடுப்பு காவலில் வைக்கப்பட்டிருக்கிறார். அத்துடன் அவர் மீது உத்தரபிரதேசம் ஹர்கான் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்திருக்கிறார்கள்.
இந்நிலையில், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவரும், எம்.பி.யுமான திருமாவளவன் தனது டுவிட்டர் பக்கத்தில், "உபி-லக்கிம்பூரில் பாஜக வன்முறை.பாதிக்கப்பட்ட விவசாயிகளைச் சந்தித்து ஆறுதல்கூற சென்ற காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் திருமதி பிரியங்கா காந்தி சட்டத்திற்குப் புறம்பாக கைது செய்து வீட்டுக்காவலில் வைத்திருப்பதை மிக வன்மையாக கண்டிக்கிறோம் . அவரை உடனே விடுதலை செய்க" என்று பதிவிட்டுள்ளார்.
