முதலமைச்சரை நேரில் சந்தித்து நலம் விசாரித்தார் ஓ.பி.எஸ்
குடலிறக்க அறுவை சிகிச்சைக்கு பிறகு ஓய்வெடுத்து வரும் தமிழக முதல்வர் எடப்பாடியை, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் நேரில் சந்தித்து நலம் விசாரித்தார்.
தமிழக சட்டமன்ற பொதுத் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டவுடன் அனைத்துக் கட்சிகளும் சூறாவளி சுற்றுப்பயணம் மேற்கொண்டு தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வந்தன. தேர்தல் களத்தில் அதிமுகவுக்கும், திமுகவுக்கும் தான் கடுமையான போட்டி நிலவியது. ஏப்ரல் 6ம் தேதி தமிழக சட்ட மன்ற பொதுத் தேர்தல் நடைபெற்று முடிந்தது.
இதனையடுத்து, வீட்டில் இருந்தவாறு கட்சிப் பணிகளையும், தேர்தல் தொடர்பான விவகாரங்கள் பற்றியும் தொலைபேசியின் மூலமே கவனித்து வந்தார் முதல்வர் எடப்பாடி. ஒன்றரை மாதங்களுக்கு பிறகு, சட்டப்பேரவைக்குச் சென்ற அவர், கொரோனா தடுப்பு நடவடிக்கையாக இரவுநேர ஊரடங்கையும், ஞாயிறு முழு நேர ஊரடங்கையும் அமல்படுத்தினார்.

இதனையடுத்து, குடலிறக்க நோயால் அவதிப்பட்டு வந்த முதல்வர், கடந்த 19ம் தேதி சென்னை அமைந்தகரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் குடலிறக்க அறுவை சிகிச்சை செய்து கொண்டார். சிகிச்சை முடிந்ததும் மறுநாள் காலை அவர் மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பினார். மருத்துவர்கள் முதல்வரை சில நாட்களுக்கு ஓய்வெடுக்கச் சொல்லி அறிவுறுத்தியுள்ளனர்.
இந்நிலையில், அவர் சென்னையில் உள்ள அவரது வீட்டில் ஓய்வெடுத்து வருகிறார். தற்போது, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் நேரில் சந்தித்து நலம் விசாரித்ததோடு, விரைவில் பூரண குணம் பெற வாழ்த்து தெரிவித்தார். துணை முதல்வருடன் சில கட்சி நிர்வாகிகள் உடன் சென்றதாக கூறப்படுகிறது.