கொங்கு நாடு என புதிய மாநிலத்தை உருவாக்கலாம்- ராமதாஸ் யோசனை
தமிழகத்தை 3 மாநிலங்களாக பிரிக்கலாம் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் யோசனையை முன்வைத்துள்ளார்.
சட்டமன்ற பொதுத் தேர்தல் தமிழகம், புதுச்சேரி மற்றும் கேரளா ஆகிய மாநிலங்களில் ஒரே கட்டமாகத் நடைபெற்று முடிந்துள்ளது.
இதுதொடர்பாக பாமக நிறுவனர் ராமதாஸ் தனது டுவிட்டர் பக்கத்தில் ஒரு பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், மேற்கு வங்கம் இன்னும் வளர்ச்சியடையாமல் இருப்பதற்கு முக்கிய காரணம் அதன் மிகப்பெரிய நிலப்பரப்பாகும். மேற்கு வங்கத்தை மூன்றாக பிரித்து மேற்குவங்கம், கூர்க்காலாந்து, காம்தாப்பூர் ஆகிய மாநிலங்களாக உருவாக்க வேண்டும் என்று நீண்ட காலமாகவே கோரிக்கை வைக்கப்பட்டு வருகிறது. இந்த கோரிக்கைகள் நிறைவேற்றப்பட்டால்தான் மேற்கு வங்கம் வளர்ச்சி அடையும்.
அதேபோல உத்தரப்பிரதேசத்தை, உத்தரப்பிரதேசம், ஆவாத் பிரதேசம், பிராஜ் பிரதேசம், புந்தல் காண்ட், பூர்வாஞ்சல் ஆகிய 5 மாநிலங்களாக பிரிக்க வேண்டும் என்ற கோரிக்கை ஓங்கி ஒலித்துக் கொண்டு இருக்கிறது.

மேலும், “புதிய மாநிலங்கள் உருவாக்கப்படுவது நல்லதா? என்று கேட்டால் நிச்சயம் நல்லது தான். கடந்த 2000ம் ஆண்டில் பீகார், உத்தரப்பிரதேசம், மத்தியப் பிரதேசம் ஆகிய மாநிலங்களைப் பிரித்து ஜார்க்கண்ட், உத்தரகாண்ட், சத்தீஸ்கர் ஆகிய 3 புதிய மாநிலங்கள் உருவாக்கப்பட்டன. புதிதாக பிரிக்கப்பட்ட 3 மாநிலங்களும் அவற்றின் தாய் மாநிலங்களை விட அதிகமாகவே வளர்ச்சி அடைந்துள்ளது. 2014ம் ஆண்டில் பிரிக்கப்பட்ட ஆந்திரா, தெலுங்கானா ஆகிய மாநிலங்களும் கூட போட்டிப்போட்டுக் கொண்டு வளர்ச்சி அடைந்து வருகிறது.
ஆகவே மாநிலங்கள் பிரிக்கப்படுவது மிகவும் சிறந்ததே. அது வளர்ச்சிக்கு நிச்சயமாக வழி வகுக்கும்.
மற்ற மாநிலங்கள் மட்டும் அல்ல, தமிழ்நாட்டில் கூட சென்னை, கோவை ஆகியவற்றுக்கு இணையாக மதுரையில் தொழிற்சாலைகள் கிடையாது. அதனால், தென் மாவட்டங்களை தனியாக பிரிக்க வேண்டும். கொங்கு நாடு என்ற புதிய மாநிலத்தை உருவாக்க வேண்டும் என்று கொங்கு மண்டலத்தில் உள்ளவர்கள் வலியுறுத்தி வருகிறார்கள். சிறியவையே அழகானவை என்று பதிவிட்டுள்ளார்.