மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் இன்று இலங்கை பயணம்!
மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் 3 நாள் அரசு முறைப் பயணமாக இன்று இலங்கை தலைநகர் கொழும்பு செல்ல உள்ளார்.
கடந்த டிசம்பர் 30ம் தேதி சிறை பிடிக்கப்பட்ட தமிழக மீனவர்கள் குறித்தும் அவர்களின் படகுகளை விடுவிப்பது குறித்தும், இலங்கை அரசிடம் அமைச்சர் ஜெய்சங்கர் பேச்சுவார்த்தை நடத்துவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இது தொடர்பாக வெளியுறவுத்துறை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு வருமாறு -
இலங்கை வெளியுறவுத்துறை அமைச்சர் தினேஷ் குணவர்த்தனவின் அழைப்பின் பேரில், மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் 3 நாள் பயணமாக இலங்கை செல்கிறார்.
ஜன.7 வரை... ஜனவரி 7ம் தேதி வரை கொழும்புவில் தங்கியிருக்கும் அவர், இலங்கை அதிபர் கோத்தபய ராஜபட்ச, பிரதமர் மகிந்த ராஜபட்ச மற்றும் வெளியுறவுத்துறை அமைச்சர் தினேஷ் குணவர்த்தன ஆகியோரை தனித்தனியாக சந்தித்தப பேச உள்ளார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியா - இலங்கை இடையிலான உறவை மேம்படுத்தும் நோக்கில், அவரின் பயணம் இருக்கும் என்று கூறப்படுகிறது. ஏனெனில், கடந்த காலங்களில் இரு நாடுகளிடையிலான உறவில் விரிசல் ஏற்பட்டிருந்தது. இதற்கு சீனா, இலங்கையுடன் நெருங்கிய உறவு வைத்திருந்ததும் ஒரு காரணமாகச் சொல்லப்படுகிறது. இந்தியாவுடன் உறவை மேம்படுத்த விரும்புகிறது என்றும் இலங்கையில் பாதுகாப்பு தொடர்பான அணுகுமுறையில் இந்தியாவுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என்றும் அந்த நாடு தெரிவித்திருந்தது.
இதனையடுத்து இலங்கையுடன் உறவை மேம்படுத்தும் வகையில், வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் பயணம் மேற்கொள்கிறார். கடந்த நவம்பரில் தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் இலங்கைக்கு சென்று திரும்பியது குறிப்பிடத்தக்கது.
இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
