உ.பி. விவசாயிகள் உயிரிழப்பு... அரசின் வன்முறை வெறியாட்டம் வெட்கக்கேடானது - சீமான் ஆவேசம்!

politics-siman
By Nandhini Oct 05, 2021 10:00 AM GMT
Report

உத்தரபிரதேசத்தில் விவசாயிகள் உயிரிழந்த சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்து நாட்டை மீட்க மற்றொரு விடுதலைப் போர் நடத்த வேண்டும் என்று நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் தெரிவித்திருக்கிறார்.

உத்திரப்பிரதேசத்தில் லக்கிம்பூரில் மாநில துணை முதல்வர் கேசவ பிரசாத் மவுரியா நேற்று முன்தினம் நிகழ்ச்சி ஒன்றில் தொடக்கி வைப்பதற்காக சென்றார். அப்போது, விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். ஒரு கார் போராட்டக்காரர்கள் மீது மோதியது. இதில் விவசாயிகள் பரிதாபமாக உயிரிழந்தனர். பலர் படுகாயம் அடைந்தனர்.

உயிரிழந்த விவசாயிகளின் குடும்பங்களுக்கு 45 லட்சம் வழங்கப்படும் என உத்திரப்பிரதேச அரசு தெரிவித்துள்ளது. லகிம்பூர் வன்முறை சம்பவத்தையடுத்து, அப்பகுதியே கலவர பூமியாக மாறி இருக்கிறது. எதிர்க்கட்சியினர் யாரும் அப்பகுதிக்குச் செல்ல அனுமதி கொடுக்கப்படவில்லை. பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ஆறுதல் சொல்ல முயன்ற பிரியங்கா காந்தி கைது செய்யப்பட்டார்.

சமாஜ்வாதி தலைவர் அகிலேஷ் யாதவும் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டிருக்கிறார். விவசாயிகள் கொல்லப்பட்ட இச்சம்பவத்திற்கு அரசியல் தலைவர்கள் பலர் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், வன்முறையை ஏவிவிட்டு அப்பாவி விவசாயிகளை தாக்குவது ஈவு இரக்கமற்ற கோரச் செயல் என சீமான் தெரிவித்திருக்கிறார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு - விவசாயிகள் மீது வாகனம் ஏற்றி விவசாயிகள், பத்திரிக்கையாளர் என 8 பேர் படுகொலை செய்யப்பட்டது பேரதிர்ச்சி தருகிறது.

விவசாயிகளை கொன்றொழித்த இக் கொடுஞ்செயல் ஒட்டுமொத்த நாட்டையே வெட்கி தலைகுனிய செய்கிறது. விவசாயிகள் இலாபத்தை இரட்டிப்பாக உயர்த்துவோம் என வாக்குறுதி அளித்த பாஜக அரசு அப்பாவி விவசாயிகளை தாக்குவது ஈவு இரக்கமற்ற செயல் நிகழ்த்துவது கொலை வெறி பிடித்த பாசிச ஆட்சியின் உச்சமாகும்.

இதை வன்மையாக கண்டிக்கிறேன். மனித தன்மையே அற்ற கொடுங்கோலர்கள் கைகளில் நாடும் மக்களும் சிக்குண்டு நாளும் வதைபடுவதும் அரசின் வன்முறை வெறியாட்டத்திற்கு படுகொலைக்கும் முழுவதும் வெட்கக்கேடானது.

நாட்டை மீட்க மற்றொரு விடுதலைப்போர் நடத்திட நாட்டு மக்கள் ஓரணியில் திரள வேண்டியது பெரும் கடமை ஆகும். கலவரத்திற்கு காரணமான அஜய் மிஸ்ராவை பதவி நீக்கம் செய்து அவர் மீது கொலை வழக்கின் கீழ் வழக்கு பதிவு செய்ய வேண்டும்.

இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார். 

உ.பி. விவசாயிகள் உயிரிழப்பு... அரசின் வன்முறை வெறியாட்டம் வெட்கக்கேடானது - சீமான் ஆவேசம்! | Politics Siman