என் குடும்பத்தினர் ஒருவர் கூட ஏன் ஓட்டு போடவில்லைன்னு தெரியுமா? ‘ஒத்த ஓட்டு பாஜக’வுக்கு கார்த்தி கொடுத்த விளக்கம்

politics-samugam-tamilnadu
By Nandhini Oct 13, 2021 03:53 AM GMT
Report

குடும்ப உறுப்பினர்கள் 5 பேர் இருந்தும் அந்த ஓட்டு கூட ஏன் விழவில்லை என்பதற்கு பாஜக கார்த்தி விளக்கம் கொடுத்துள்ளார்.

கோவை மாவட்டத்தில் 13 உள்ளாட்சி பதவிகளுக்கான நடைபெற்ற தேர்தலில் நேற்று வாக்குகள் எண்ணப்பட்டன.

பெரியநாயக்கன்பாளையம் ஒன்றியம் குருடம்பாளையம் ஊராட்சி 9-வது வார்டு உறுப்பினருக்கான வாக்கு எண்ணிக்கையின் முடிவில் மொத்தம் ஆயிரத்து 1551 வாக்குகள் இருந்ததில், 913 வாக்குகள் மட்டுமே பதிவாகி இருந்தன.

திமுக சார்பில் கட்டில் சின்னத்தில் போட்டியிட்ட அருள்ராஜ் 387 வாக்குகள் பெற்று வெற்றி அடைந்தார். அதிமுக சார்பில் சங்கு சின்னத்தில் போட்டியிட்ட வைத்தியலிங்கம் 196 வாக்குகள் பெற்றார்.

பாஜக வடக்கு மாவட்ட இளைஞர் அணி துணை தலைவர் கார்த்திக் சுயேட்சையாக கார் சின்னத்தில் போட்டியிட்டு ஒரே ஒரு ஓட்டு மட்டுமே பெற்றார்.

இதனையடுத்து, ‘ஒத்த ஓட்டு பாஜக’ என்று டுவிட்டரில் ட்ரெண்டானது. அண்ணாமலையின், பாஜகவின் கொங்கு மண்டல கனவு திவால் ஆனது என்று நெட்டிசன்கள் கடுமையாக விமர்சித்து வருகின்றனர். கார்த்தியின் குடும்ப உறுப்பினர்கள் 5 பேர் உள்ளனர்.

ஆனாலும், அவருக்கு உறவினர்கள் நண்பர்கள் என்று பலர் இருந்தும் அவர்கள் கூட ஓட்டு போடவில்லை. அந்த ஒரே ஒரு ஓட்டும் தனக்குத்தானே போட்டுக் கொண்ட ஓட்டு என்று கடும் விமர்சனம் எழுந்தது.

இந்நிலையில், பாஜக பிரமுகர் காயத்ரி ரகுராம் ஒன்று கிடைத்தாலும் அவருக்கு கிடைத்த சாதனைதான். தேர்தலில் போட்டியிட வேண்டும் என்று துணிந்து நின்றாரே அதுவே பெருமைப்பட வேண்டிய விஷயம் தான் என்று சொல்லி சமாளித்துள்ளார்.

மேலும் அவர், கார்த்தி பாஜக சார்பில் போட்டியிடவில்லை சுயேட்சையாக போட்டியிட்டிருக்கிறார் என்று கூறியுள்ளார். ஆனாலும் அவர் பாஜக பிரமுகர் என்பதால், ஒத்த ஓட்டு பாஜக என்றே விமர்சிக்கப்பட்டு வருகிறார்.

இந்நிலையில், குடும்ப உறுப்பினர்கள் கூட ஏன் வாக்களிக்கவில்லை என்ற விமர்சனங்களுக்கு அவர் தற்போது விளக்கம் கொடுத்துள்ளார்.

இது குறித்து அவர் பேசுகையில், நான் வசிப்பது 4-வது வார்டில். நானும் எனது குடும்பமும் அங்கு தான் வசித்து வருகிறோம். ஆனால், இடைத்தேர்தலில் 9-வது வார்டில் போட்டியிட்டு பார்க்கலாம் என்று போட்டியிட்டேன். போட்டியிட்டாலும் என் குடும்ப சூழ்நிலை காரணமாக பிரச்சாரம் செய்யவில்லை.

நான் அந்த வார்டில் நிற்கிறேன் என்பதை கூட யாரிடமும் சொல்லாமல் இருந்துவிட்டேன். இதனால் தான் ஒரே ஒரு ஓட்டு விழுந்தது. இதையே வெற்றியாக நினைக்கிறேன். அடுத்த தேர்தலில் 4-வது வார்டில் போட்டியிட்டு பாஜகவுக்கு வெற்றியை தேடி கொடுப்பேன் என்று தெரிவித்தார். 

என் குடும்பத்தினர் ஒருவர் கூட ஏன் ஓட்டு போடவில்லைன்னு தெரியுமா? ‘ஒத்த ஓட்டு பாஜக’வுக்கு கார்த்தி கொடுத்த விளக்கம் | Politics Samugam Tamilnadu