விடிய விடிய போலீஸ் ஸ்டேஷனில் பொன்.ராதாகிருஷ்ணன் - வைரலாகும் புகைப்படம்!
பாஜக மூத்த தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான பொன்.ராதாகிருஷ்ணன் காவல்நிலையத்தில் படுத்து உறங்கும் புகைப்படங்கள் தற்போது சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
தமிழகத்தில் 9 மாவட்டங்களுக்கு உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்று முடிந்திருக்கிறது. 2ம் கட்ட தேர்தலுக்கான வாக்குப்பதிவு கடந்த 9ஆம் தேதி விறுவிறுப்பாக நடந்தது. இந்நிலையில், நெல்லை மாவட்டம் வள்ளியூர் அருகே பிரச்சாரம் நடந்துள்ளது. பாஜக உறுப்பினர் பாஸ்கர் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வந்தார்.
வாக்குப்பதிவின் போது பிரச்சாரத்தின் ஈடுபட்டதால் பாஜக உறுப்பினர் பாஸ்கருக்கும் மற்றொரு தரப்பினருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதில், பாஜக உறுப்பினர் பாஸ்கர் மர்ம நபர்களால் தாக்கப்பட்டார்.
இதனை அறிந்த, மத்திய முன்னாள் அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் பாஸ்கர் மீது தாக்குதல் நடத்தியவர்களை கைது செய்யக் கோரி நெல்லை சந்திப்பு பாரதியார் சிலை முன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டார்.
அப்போது அவரை போலீசார் கைது செய்தார்கள். அங்கிருந்து நெல்லை ஜங்ஷன் காவல் நிலையத்துக்கு அழைத்துச் செல்லப்பட்ட அவர், காவல்நிலையத்திலும் பாஸ்கர் தாக்குதல் நடத்தியவர்களை கைது செய்ய வேண்டும் என்றும் கொலை முயற்சி வழக்குப் பதிவு செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
பின்னர், அன்று இரவு ஸ்டேஷனிலேயே தங்கிய அவர் அங்கேயே படுத்து உறங்கினார். விடிந்த பிறகு போலீஸ் ஸ்டேஷனிலிருந்து அவர் கிளம்பிச் சென்றார். போலீஸ் ஸ்டேஷனில் தரையில் ஒரு போர்வையைப் போர்த்திக் கொண்டு முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் படுத்து உறங்கிய புகைப்படம் தற்போது சமூகவலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.
