‘மோடி கடவுளின் அவதாரம்.. அரசியல் கண்ணோட்டத்துடன் பார்க்காதீங்க...’ - விளக்கம் கொடுக்கும் பா.ஜ.க.
மோடி கடவுளின் அவதாரம் என்று உபேந்திர திவாரி கூறியதை அரசியல் கண்ணோட்டத்துடன் பார்க்க கூடாது என்றும், கடவுன்னு சொன்னா அவர் கடவுள்ன்னு அர்த்தம் கிடையாது என்றும் பா.ஜ.க. செய்தி தொடர்பாளர் அனிலா சிங் தெரிவித்திருக்கிறார்.
உத்தர பிரதேச பஞ்சாயத்து ராஜ் துறை அமைச்சர் உபேந்திர திவாரி கூட்டம் ஒன்றில் பேசுகையில், நரேந்திர பாய் மோடி சாதாரண ஆள் கிடையாது. எல்லாம் வல்ல இறைவனின் அவதாரம் என்றார். இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இதனையடுத்து, பா.ஜ.க.வின் செய்தி தொடர்பாளர் அனிலா சிங் மீண்டும் விளக்கம் அளித்து கூறுகையில், உபேந்திர திவாரியின் அறிக்கைகளை அரசியல் கண்ணோட்டத்தில் பார்க்கக் கூடாது என்றார்.
இது குறித்து உபேந்திர திவாரி பேசுகையில், பிரதமரின் நூற்றுக்கணக்கான சமூக திட்டங்கள் உள்ளன, அவை நிறைய மக்களுக்கு பயனளிக்கின்றன, எனவே அந்த நபரை பொறுத்தவரை மோடி ஜி கடவுளுக்கு சமமானவர். யாராவது எனக்கு எதாவது பெரிய காரியத்தை செய்தால், அவர்கள் எனக்கு கடவுளாக இருப்பார்கள். ஆனால் அவர்கள் கடவுள் என்று அர்த்தம் கிடையாது என்றார்.