“வெட்கமே இல்லையா; உங்கள் முகத்திரையைக் கிழிச்சிருவேன்” – தலிபான்களை ஆதரிப்பவர்களுக்கு யோகி ஆதித்யநாத் விளாசல்!
20 ஆண்டுகளுக்குப் பிறகு தலிபான்கள் ஆப்கானிஸ்தானை கைப்பற்றியுள்ளனர். ஆப்கானிஸ்தான் முழுவதும் அவர்களின் கட்டுப்பாட்டின் கீழ் வந்துள்ளது. அவர்களின் அடக்குமுறைகளுக்கு அஞ்சி மக்கள் அந்நாட்டை விட்டு வெளியேறி வருகின்றனர்.
அந்நாட்டை விட்டு எப்படியாவது தப்பித்துவிட வேண்டும் என்று ஒற்றை மனநிலையில் விமானங்களின் டயர்களில் தொங்கி பறந்தனர். இதனால், உயர பறந்த விமானத்திலிருந்து 3 பேர் கீழே விழுந்து பரிதாபமாக உயிரிழந்தனர். இது குறித்த வீடியோ காட்சிகள் உலகம் எங்கும் அதிர்வலையை ஏற்படுத்தின.
ஆனால், இந்தியாவில் ஒரு சிலர் தலிபான்களுக்கு ஆதரித்து தெரிவித்து சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர். அதில் ஒருவர் சமாஜ்வாதி கட்சியைச் சேர்ந்த எம்பி ஷபிக்குர் ரஹ்மான் பர்க். தலிபான்கள் ஆப்கானிஸ்தான் சுதந்திரத்துக்காகப் போராடுகிறார்கள் என்றும், அந்நாட்டு மக்களும் தலிபான்கள் தலைமையின் கீழ் இருக்க விரும்புகின்றனர் என்று கூறி சர்ச்சையில் சிக்கி இருக்கிறார்.
இதனால் அவர் மீது தேசத்துரோக வழக்கு பதிவு செய்யப்பட்டது. இது குறித்து உத்தரப் பிரதேச சட்டப்பேரவையில் முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் பேசுகையில், “தலிபான் பயங்கரவாதிகளுக்கு ஆதரவாக இந்தியாவில் சிலர் பேசி வருகிறார்கள்.
அங்கு குழந்தைகளுக்கு எதிராக தலிபான்கள் அடக்குமுறையைப் பிரயோகித்து வருகின்றனர். போராட்டம் நடத்தும் சொந்த நாட்டு மக்களையே தலிபான்கள் சுட்டுக் கொல்கின்றனர்.
ஆனால், இங்கே சிலர் வெட்கமே இல்லாமல் தலிபான்களை ஆதரித்து பேசுகிறார்கள். ஆதரிப்பவர்களின் முகத்திரையைக் கிழிக்க வேண்டும். அவர்களை மக்கள் முன் அம்பலப்படுத்த வேண்டும் என்று ஆவேசமாக பேசினார்.