ஷாருக்கானின் மகன் கைது - உண்மை பிரச்சனையை திசை திருப்புகிறார்கள் - காங்கிரஸ் குற்றச்சாட்டு!
கடந்த மாதம் குஜராத் மாநிலத்தில் உள்ள முந்த்ரா துறைமுகத்தில் ரூ.21 ஆயிரம் கோடி மதிப்பிலான சுமார் 3 ஆயிரம் கிலோ ஹெராயின் பறிமுதல் செய்யப்பட்டது.
இதனையடுத்து, நேற்று முன்தினம் மும்பையில் நடிகர் ஷாருக்கானின் மகன் உட்பட சிலரை போதைப்பொருள் தடுப்பு பிரிவினர் சொகுசு கப்பலில் போதை விருந்தில் கலந்து கொண்டதற்காக கைது செய்யப்பட்டுள்ளார்கள். ஆனால் காங்கிரஸ் கட்சியோ உண்மையான பிரச்சனையை திசை திருப்புவதற்காகவே கப்பலிலிருந்து போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்திருக்கிறது.
இதற்கிடையே, “போதை பொருள் தடுப்பு பிரிவினர் இந்தி நடிகரின் மகனை கப்பலில் போதை பொருள் பறிமுதல் செய்ததாக கூறி கைது செய்திருக்கிறார்கள்” என்று காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளர் ஷாமா முகமது கூறியிருக்கிறார். மேலும், முந்த்ரா துறைமுகம் போதைப்பொருள் தான் உண்மையான பிரச்சனை.
அதோடு மட்டுமில்லாமல் ஆப்கானிஸ்தானிலிருந்து அந்த போதை பொருள்கள் கடத்தப்பட்டிருக்கிறது. ஆனால், போதை பொருள் தடுப்பு பிரிவினரோ ஊடகத்தினர் ஒளிபரப்புவார்கள் என்பதற்காகவே இங்கும், அங்குமாக சிலரை கைது செய்து வருகிறார்கள். உண்மையான பிரச்சனையை திசை திருப்புவதற்காகவே இவ்வாறு நடந்து கொள்கின்றனர் என்றும் அவர் தெரிவித்திருக்கிறார்.
மேலும், உள்துறை மந்திரி அமித்ஷா, பிரதமர் மோடி உள்ளிட்டோர் முந்த்ரா-வில் அதிக அளவில் போதை பொருள் பறிமுதல் செய்யப்பட்ட விவகாரம் தொடர்பில் அமைதி காத்து வருவது ஏன் ? என்பது குறித்த கேள்வியையும் அவர் எழுப்பி இருக்கிறார்.
