'அக்கா' என்று கூப்பிடும் மோடி மீதே குற்றம் சுமத்துவதா? மம்தாவுக்கு கண்டனம் தெரிவித்த பாஜக!
மேற்குவங்கத்தில் தேர்தல் பிரசாரத்திற்காக வெளியில் இருந்து ஆட்களை கூட்டிவந்து கொரோனா தொற்று நோயை பரப்பிவிட்டு ஓடிப்போய்விட்டார்கள் என திரிணமுல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார். இவரின் பேச்சுக்கு பாஜகவினர் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.
மேற்குவங்கத்தில் 8 கட்டங்களாக சட்டசபை தேர்தல் நடைபெற்று வருகிறது. 5-வது கட்ட தேர்தல் ஏப்ரல் 17ம் தேதி நடைபெற உள்ளன. இதனால் தேர்தல் களத்தில் அனல் பறந்து கொண்டிருக்கிறது.
தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறியதாக கூறி அடுத்த 24 மணி நேரத்துக்கு பிரச்சாரத்தில் ஈடுபட மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜிக்கு தேர்தல் ஆணையம் தடை விதித்தது. மத ரீதியாகப் பேசியதாகவும், மத்தியப் படைகளுக்கு எதிராக வெகுண்டெழுமாறு வாக்காளர்களை தூண்டியதாகவும் அவர் மீது புகார் அளிக்கப்பட்ட நிலையில் தேர்தல் ஆணையம் இந்த உத்தரவைப் பிறப்பித்தது குறிப்பிடத்தக்கது.
அதனையடுத்து, தொடர்ந்து தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்ட அம்மாநில முதல்வரும், திரிணமுல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜி பரப்புரை மேற்கொண்டார். வடக்கு பெங்காலின் ஜல்பாய்குரி பகுதியில் அக்கட்சி வேட்பாளர் டாக்டர் பிரதீப் பர்மாவை ஆதரித்து அவர் பிரச்சாரம் மேற்கொண்டார். ஆனால், பிரதீப்க்கு கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதால் அவரால் பிரசாரத்தில் கலந்து கொள்ள இயலவில்லை.
பிரச்சாரத்தில் மம்தா பேசியதாவது -
மேங்கு வங்கத்தில் கொரோனா தொற்று பரவல் கட்டுப்பாட்டில் இருந்தது. இப்போது மீண்டும் கொரோனா அதிகளவில் பரவுகிறது. யாருக்கு வேண்டுமானாலும் எந்த நேரத்திலும் கொரோனா தொற்று ஏற்படலாம். கடந்த முறை கொரோனா பரவல் ஏற்பட்டபோது நீங்கள் அனைவரும் எங்கு இருந்தீர்கள்? தேர்தல் தேதி அறிவித்தவுடன் பிரசாரத்திற்காக வெளியிலிருந்து ஆட்களைக் கூட்டிக் கொண்டு வந்து, கொரோனா தொற்றை பரப்பிவிட்டு ஓடிவிட்டீர்கள். அவர்கள் போகட்டும். மக்களே நீங்கள் எங்களுக்கு வாக்களியுங்கள். இந்திய அரசு தடுப்பூசியை அனைத்து மக்களுக்கும் குறித்த நேரத்தில் செலுத்தியிருந்தால் இன்று நம் நாட்டில் 2ம் அலையே ஏற்பட்டிருக்காது என்று பேசினார்.

மம்தாவின் இந்த பிரச்சார பேச்சுக்கு பாஜகவினர் பலரும் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர். இதற்கு மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி பதில் அளித்து பேசுகையில், மம்தாவை பிரதமர் அக்கா என்றே அழைப்பார். ஆனால், மம்தாவோ கொரோனா பரவலுக்கு மோடி மற்றும் அமித் ஷாவே காரணம் என்று கூறியிருக்கிறார். இது எனக்கு அதிச்சியை அளிக்கிறது என்றார்.