பாஜகவிலிருந்து விலகுகிறாரா சுப்பிரமணியன் சுவாமி? மம்தாவை புகழ்ந்து டுவிட்

politics
By Nandhini Nov 25, 2021 07:19 AM GMT
Report

பாஜகவைச் சேர்ந்த மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி டெல்லியில் இன்று மம்தா பானர்ஜியை சந்தித்து பேசியுள்ளார். இந்த சந்திப்புக்கு பிறகு அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், மம்தா பானர்ஜியை புகழ்ந்து தள்ளி இருக்கிறார்.இது அரசியலில் பெரும் பரபரப்பையும், சலசலப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

பாஜக மூத்த தலைவரும், எம்.பி.யுமான சுப்பிரமணியன் சுவாமி சமீப காலமாக பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசை விமர்சனம் செய்து வருகிறார். பாஜகவின் தேசிய செயற்குழுவிலிருந்து கடந்த மாதம் சுப்பிரமணியம் சுவாமி நீக்கப்பட்டார்.

இதனையடுத்து, அவர் தனது டுவிட்டர் பக்கம் பயோவில் பாஜக என்பதை அவர் நீக்கிவிட்டார். மேலும், வேளாண் சட்டம், சீனா எல்லை ஆக்கிரமிப்பு என மத்திய அரசுக்கு எதிரான விமர்சனம் செய்து வருகிறார்.

இந்நிலையில், இன்று காலை மம்தா பானர்ஜியை சுப்பிரமணியன் சுவாமி சந்தித்து பேசினார். இது தற்போது அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பிற கட்சிகளை சேர்ந்த முக்கிய தலைவர்களும், பிரபலங்களும் மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் இணைந்து வருகிறார்கள்.

இந்தச் சூழலில் சுப்பிரமணியன் சுவாமியும் அவரது கட்சியில் இணைய கூடுமோ என்ற சந்தேகத்தை தற்போது இந்த சந்திப்பால் எழுந்துள்ளது.

இது குறித்து சுப்பிரமணியன் சுவாமி செய்தியாளர்களிடம் பேசுகையில், ‘நான் ஏற்கனவே அவருடன் (மம்தா) இருக்கிறேன். எனவே அவரது கட்சியில் இணைய வேண்டிய அவசியம் இல்லை என்றார்.

இந்நிலையில், தனது டுவிட்டர் பக்கத்தில் சுப்பிரமணியன் பதிவில், இந்திய தேசக்கட்டுமானத்தின் முக்கியத் தலைவர்களான ஜெயபிரகாஷ் நாராயணன், மொரார்ஜி தேசாய், ராஜிவ் காந்தி, சந்திரசேகர், பி.வி.நரசிம்ம ராவ் ஆகியோருடன் ஒப்பிட்டு இவர்களெல்லாம் சொல்வதை வாழ்ந்தனர், அதாவது இவர்களிடத்தில் சொல்லுக்கும் பொருளுக்கும் முரண் இருந்ததில்லை, இது பெரிய அரிய குணம் என்று பாராட்டியுள்ளார். அதாவது அந்தப் பெருந்தலைவர்கள் என்ன சொன்னார்களோ அது அர்த்தம் நிரம்பியது, அர்த்தம் நிரம்பியதுதான் அவர்கள் சொல்லாகவே இருந்தது என்று மம்தாவை அவர்களுடன் ஒரே தராசில் நிறுத்தி புகழ்ந்து தள்ளியுள்ளார் சுப்பிரமணியன் சுவாமி.