சீமான் ஒரு சமூக சீர்குலைவு சக்தி - குண்டர் சட்டத்தில் கைது செய்ய வேண்டும் - கே.எஸ். அழகிரி வலியுறுத்தல்
நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமானை குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்ய வேண்டும் என்று தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி வலியுறுத்தியிருக்கிறார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் வருமாறு -
இந்தியாவில் தடை செய்யப்பட்ட விடுதலைப் புலிகள் அமைப்பிற்கு ஆதரவாக சீமான் தலைமையிலான நாம் தமிழர் இயக்கம் பகிரங்கமாகச் செயல்பட்டு வருகிறது.
சமீபத்தில் தேர்தல் பிரச்சாரக் கூட்டம் ஒன்றில் முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தியையும், அன்னை சோனியா காந்தியையும் தனிப்பட்ட முறையில் இழிவுபடுத்துகிற வகையில் சீமான் பேசியது சமூக ஊடகங்களில் பரவலாக வெளிவந்துள்ளது. இத்தகைய கூட்டங்களில் வன்முறையைத் தூண்டுகிற வகையிலும், சட்டம் ஒழுங்கை சீர்குலைக்கிற போக்கிலும் அவர் தொடர்ந்து பேசி வருகிறார்.
இதுகுறித்து காவல்துறையினரிடம் புகார் தெரிவித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. மேலும், துணிவிருந்தால் என் மீது காவல்துறை வழக்கு தொடுக்கட்டும், கைது செய்யட்டும், சிறைக்குச் செல்ல தயாராக இருக்கிறேன் என்று தமிழ்நாடு காவல்துறைக்கு சவால் விட்டுத் தொடர்ந்து பேசி வருகிறார். எந்த சட்டத்திற்கும் கட்டுப்படாத, அடங்க மறுக்கிற அடாவடித்தனமாகச் செயல்படுகிற சமூக சீர்குலைவு சக்தியாக சீமான் விளங்கி வருகிறார்.
சீமான் மீது தமிழக காவல்துறையினர் கடுமையான நடவடிக்கை எடுத்து, இவரது சட்டவிரோத பேச்சின் அடிப்படையில் உடனடியாக குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்ய வேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறேன்.
விடுதலைப் புலிகள் அமைப்பின் புலனாய்வு பிரிவோடு தொடர்புடைய சற்குணன் என்கிற சபேசன் தேசிய புலனாய்வு அமைப்பினரால் கைது செய்யப்பட்டுள்ள அதிர்ச்சியான தகவல் வெளியாகி உள்ளது. சற்குணனுக்கும், நாம் தமிழர் கட்சி தலைவர் சீமானுக்கும் நெருங்கிய தொடர்பு இருப்பதாகக் கூறப்படுகிறது.
இவர் மூலமாக பெரும் நிதி சீமானுக்கு வழங்கப்பட்டதாகவும் செய்திகள் வெளிவந்துள்ளன. இதுகுறித்து தேசிய புலனாய்வு அமைப்பு தீவிரமாக விசாரிக்க வேண்டுமெனக் கேட்டுக் கொள்கிறேன். சீர்குலைவு சக்திகளை முளையிலேயே கிள்ளி எறியவில்லையெனில், அவரது வன்முறை பேச்சால் ஈர்க்கப்பட்டு இளைஞர்கள் தவறான தீவிரவாத பாதைக்குச் செல்ல நேரிடும் என எச்சரிக்க விரும்புகிறேன்.
இந்த போக்கு தடுக்கப்படாவிட்டால் எதிர்காலத்தில் நாம் தமிழர் கட்சி ஒரு பயங்கரவாத அமைப்பாக மாறுவதற்கும் வாய்ப்பு இருக்கிறது. எனவே, அவரது பேச்சுகள், நடவடிக்கைகள் கண்காணிக்கப்பட்டு, சட்ட விரோதமாகச் செயல்படும் அவர் மீது கடுமையான நடவடிக்கை எடுப்பது, தமிழகத்தின் அமைதிக்கு பெரும் துணையாக இருக்கும் என்பதைக் கூற விரும்புகிறேன்.
இவ்வாறு அந்த அறிக்கையில் கூறியுள்ளார்.
