இளையவராக இருந்தாலும் கூட நான் முதல்வர் மு.க.ஸ்டாலின் பாதங்களை தொட்டு வணங்குகிறேன் - நெல்லைக்கண்ணன்

politics
By Nandhini Sep 06, 2021 05:03 AM GMT
Report

முதல்வர் மு.க. ஸ்டாலின் வ.உ.சியின் 150வது பிறந்த நாளை முன்னிட்டு சட்டசபையில் தமிழக முதல்வர் 14 அறிவிப்புகளை வெளியிட்டார். அந்த அறிவிப்பில், சென்னை காந்தி மண்டபத்தில் உள்ள வ.உ.சி. சிறையில் இழுத்த செக்கு வைக்கப்பட்டிருக்க கூடிய மண்டபம் பொலிவூட்டப்பட்டு அவரது மார்பளவு சிலை திறந்து வைக்கப்படும்.

தூத்துக்குடி மாநகரில் முதன்மைச் சாலையான பெரிய காட்டன் சாரி வ.உ.சிதம்பரம் சாலை என்று அழைக்கப்படும். வாழ்நாள் முழுவதும் கோவை சிறையிலேயே கழித்தவருக்கு முழு உருவச்சிலை அணிந்து கோயம்புத்தூர் சிதம்பரனார் பூங்காவில் அமைக்கப்படும் என்று அறிவித்தார்.

மேலும், கப்பல் கட்டுமானம், தொழில்நுட்பம் ,போக்குவரத்து போன்ற கப்பல் தொடர்பான துறைகளில் ஈடுபட்டு சிறந்த பங்காற்றி வரும் தமிழர் ஒருவருக்கு ஆண்டுதோறும் கப்பலோட்டிய தமிழன் வ.உ.சி விருது வழங்கப்படும், விருது தொகையாக 5 லட்சம் ரூபாய்- பாராட்டு சான்றிதழும் வழங்கப்படும் என்று தெரிவித்தார்.

கப்பலோட்டிய தமிழன் வ உ சிதம்பரனார் மறைந்த நவம்பர் 18ம் தேதி தியாகத் திருநாளாக அறிவித்து கொண்டாடப்படும் என்றும் அவர் அறிவித்தார்.

இது குறித்து காங்கிரஸ் கட்சி பிரமுகரும், பேச்சாளருமான நெல்லைக்கண்ணன் பேசியதாவது -

சென்னை காந்தி மண்டபத்தில் வஉசி சிலை, அவர் கோவையில் சிறை இருந்த இடத்தில் முழு உருவ சிலை, தமிழ்நாட்டின் பல பகுதிகளில் வஉசிக்கு மரியாதை. ஒவ்வொரு வருடமும் வ.உ.சி பெயரில் விருதும் 5 லட்ச ரூபாய் சன்மானம் ஒரு தமிழனுக்கு தருவதாக அறிவித்துள்ளார்.

குறையே சொல்ல முடியாத அளவிற்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆட்சி நடத்தி வருகிறார். இன்று வரைக்கும் யாரும் அவரை நீ கைநீட்டி கேட்க முடியாத அளவிற்கு ஆட்சி நடத்தி வருகிறார்.

அந்த மிகப் பெரிய மனிதனுக்கு செக்கிழுத்த செம்மலுக்கு, செம்மாந்த பிள்ளைவாளுக்கு மிகப்பெரிய மரியாதை செய்திருக்கிறார். வயதில் இளையவர் என்றாலும் நான் அவர் பாதங்களை தொட்டு நான் வணங்குகிறேன்.

இந்த நாட்டுக்காக தன்னையும் தன் சொத்துக்கள் அனைத்தையும் இழந்த ஒரு மிகப்பெரிய மனிதனுக்காக தன்னையும் தன் குடும்பத்தையும் தன் சொத்து சுகங்களையும் இழந்து வாடிய ஒரு மிகப் பெரிய மனிதனுக்கு தந்திருக்கிற இந்த மரியாதைக்காக முதலமைச்சர் பல்லாண்டு வாழ்க என்று வாழ்த்துகிறேன்.

இவ்வாறு அவர் பேசினார். 

இளையவராக இருந்தாலும் கூட நான் முதல்வர் மு.க.ஸ்டாலின் பாதங்களை தொட்டு வணங்குகிறேன் - நெல்லைக்கண்ணன் | Politics